சங்கரன்கோவில்.நவ.22.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நகராட்சி பகுதியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக மாடுகளை விடும் உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் மேலும் இதே நிலை தொடர்ந்தால் மாடுகள் பொது ஏலம் விடப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் மற்றும் நகராட்சி கமிஷனர் சபாநாயகம் ஆகியோர் கூறியிருப்பதாவது,
கடந்த சில நாட்களாக சங்கரன்கோவில் பகுதியில் மாடுகள் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் ஆங்காங்கே சுற்றிக்கொண்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை நிலவி வருகின்றது. சங்கரன்கோவில் நகராட்சி மூலம் கடந்த வாரம் முதல் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் மாடுகளை சாலை பகுதியில் விடக்கூடாது என அறிவிப்பு செய்யப்பட்டு வருகின்றது. மேலும் கால்நடை உரிமையாளர்களுக்கும் இதுகுறித்து நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது தற்போது அதையும் மீறி மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவது பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இனிவரும் காலங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை நகராட்சி நிர்வாகம் மூலம் பிடித்து அதனை சங்கரன்கோவில் சங்கரன் நாராயண சுவாமி திருக்கோயில் கோசலையில் ஒப்படைக்கப்படும் எனவும், மேலும் இதுபோன்று மாடுகளை வெளியில் விடுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் எனவும், இந்த சூழ்நிலை தொடர்ந்தால் கோசலைக்கு அனுப்பப்படும் மாடுகள் பொது ஏலம் மூலம்
விற்பனை செய்யப்படும் எனவும், எனவே மாடு வைத்திருக்கும் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை பாதுகாப்பாக தங்கள் பகுதியிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் , இந்த பணிகளை சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ,கருப்பசாமி, கைலாச சுந்தரம், ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றன ர் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், மற்றும் நகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.