கன்னியாகுமரி மே 7
குமரி மாவட்டம் நாகர்கோவில் கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட லெமுரியா கடற்கரைக்கு சுற்றுலா வந்த மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி ஐந்து பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு :-
தேசிய பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சி மையம் தென் தமிழக கடல் பகுதிகளில் குறிப்பாக கன்னியாகுமரி கேரளா கடல் பகுதிகளில் கடல் சீற்றம் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இதனால் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. கோடை காலம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடல் பகுதிகளுக்கு சுற்றுலா வருவார்கள், எனவே மாவட்ட நிர்வாகம் சார்பிலும் கடலில் யாரும் இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கை ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடல் அலையில் சிக்கி தேங்காய் பட்டினத்தில் ஒரு சிறுமியும் குளச்சல் அருகே சென்னை சேர்ந்த இரண்டு பேரும் நேற்று பலியானார்கள். இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த 13 மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர்கள் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளார்கள். நாகர்கோவிலை அடுத்துள்ள கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட லெமுரியா பீச்சில் அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது ஐந்து பேரை திடீரென ராட்சஷ அலைகள் இழுத்துச் சென்றது. குளச்சலில் இருந்து கடலோர காவல் படையினர் சாருஹாபி, சுருதி சரண்யா ஆகிய இரண்டு மருத்துவக் கல்லூரி மாணவிகளின் உடலை மீட்டு உள்ளனர். மேலும் 3 பேரை தேடும் பணியில் கடலோர காவல் படை தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 13 பேர்கள் சுற்றுலா வந்ததில் 7 பேர்கள் மட்டும் கடலில் இறங்கியதில் 5 மருத்துவ கல்லூரி மாணவ மாணவியர்கள் பலி 2 பேர் காயத்துடன் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.