சங்கரன்கோவில்.நவ.13.
சங்கரன்கோவிலில் வீடு சார்ந்த விசைத்தறி தொழிலாளர்களுக்கு தொழிற்சாலை வரி விதிக்க கூடாது என மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேசன் சங்கம் சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அவர்கள் அளித்த மனுவை தொடர்ந்து நேற்று சென்னையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேருவிடம் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ மனு அளித்தார். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் சுமார் 5000 விசைத்தறிகள் இயங்கி வருகின்றது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் வீடுகளில் 1 அல்லது 2 விசைத்தறிகளை துணிகளை உற்பத்தி செய்து வருகின்றனர் .அவர்களுக்கு 3ஏ2 திட்டத்தின் மூலம் அரசின் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. வீட்டிலேயே விசைத்தறி அமைத்து அங்கேயே குடும்பத்துடன் குடியிருந்து, சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்கண்ட வீடு சார்ந்த விசைத்தறி தொழிலாளர்களுக்கு வணிகவரி விதிப்பு, கட்டிட வரிவிதிப்பு செய்யப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2022-ல் உயர்த்தப்பட்ட வரி உயர்வு வணிகத், தொழில் கட்டிடங்களுக்கு 100% ம், வீட்டு வரி ரூபாய் 600 வரை உள்ள வீடுகளுக்கு 2.5% வரி உயர்வும் ரூபாய் 600 க்கு மேல் ரூபாய் 1200க்குள் வரிகட்டியவர்களுக்கு 50 % வரி உயர்வும், தற்போது ரூபாய் 1200க்கு மேல் வரி செலுத்துபவர்களுக்கு 75 சதவீத வரி உயர்வு ஏற்பட்டது . மேலும் தற்போது வருடம் தோறும் 6% வரி உயர்வு தானாக அமலில் ஏற்பட்டு உயர்த்தப்பட்டு வருகிறது .இது விசைத்தறி தொழிலாளர்களுக்கு மிகுந்த வரிச்சுமையாகும். இதனை கருத்தில் கொண்டு சிறு குடிசைத் தொழிலாக வீட்டில் தொழில் நடத்தி வரும் விசைத்தறியாளர்களுக்கு வரி விதிப்பை மாற்றாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்திரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் கே என் நேரு இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இந்த சந்திப்பின்போது சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் உடன் இருந்தார். சங்கரன்கோவில் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட இந்த வரி விதிப்பு பிரச்சனையை விசைத்தறியாளர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்