இளம் விஞ்ஞானியான கோவை நீட் அகாடமியின் விரிவுரையாளர் திருமணி செல்வம் பங்கேற்பு
ராமநாதபுரம், நவ.12-
ராமநாதபுரம் மாவட்டம் அழகன் குளம் பனைக்குளம் நஜியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளின் அறிவியல் கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் மாணவ மாணவிகளின் நவீன விவசாய இயந்திரம் நடுவர்களின் நன் மதிப்பை பெற்று சிறப்பு பரிசு பெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பனைக்குளம் நஜியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் இளம் விஞ்ஞானி விருது பெற்ற கோவை நீட் அகாடமியின் இளம் விரிவுரையாளர் திருமணி செல்வம், பள்ளியின் முன்னாள் இயக்குனர் டாக்டர் முகமது இப்ராம்ஷா ஆகியோர் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியில் மாணவ மாணவிகளின் படைப்புகளை நேரில் பார்த்து விளக்கம் கேட்டு மதிப்பெண் அளித்தனர். இந்த நடுவர் டீமில் சிறப்பு விருந்தினராக உமர் ஷெரீப் கலந்து கொண்டு மாணவ மாணவிகளின் அறிவியல் படைப்பாற்றலை பார்த்து மதிப்பீடு செய்தனர். அறிவியல் கண்காட்சியில் எல்கேஜி முதல் பிளஸ் டூ வரை பயிலும் மாணவ மாணவிகளின் அறிவியல் தொடர்பான பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டறிந்து 33 வகையான அறிவியல் படைப்புகளை கண்காட்சியில் வைத்து நடுவர்களுக்கு மிகவும் தெளிவாக மாணவ மாணவிகள் தங்களின் படைப்பு ஆற்றலை விளக்கம் அளித்தனர்.
இந்த அறிவியல் கண்காட்சியில் ஆர்கானிக் வீட்டு உபயோக மருத்துவ பொருட்கள், உரம், ஸ்மார்ட் டஸ்ட் பின், மாடியில் மழை பாதுகாப்பு நவீன ரூப், ஆர்கானிக் பூச்சி கொல்லிகள், சந்திராயன் 3, ஸ்மார்ட் பிளைண்ட் ஸ்டிக், சோலார் ட்ராக்கிங் சிஸ்டம், மிதவை வீடு, ஹைட்ராக்லிக் தூக்கு பாலம், நகை பெட்டி பாதுகாப்பு அலாரம் என 33 வகையான புதிய அறிவியல் கண்டுபிடிப்பு படைப்புகளை கண்காட்சியில் மாணவ மாணவிகள் வைத்திருந்தனர். இளம் விஞ்ஞானியான நீட் அகாடமியின் விரிவுரையாளர் இளம் விஞ்ஞானி விருது பெற்ற திருமணி செல்வம் மாணவ மாணவிகளின் அறிவியல் படைப்புகளையும் அவர்களது கண்டுபிடிப்பு குறித்த விளக்கங்களையும் கேட்டு மெய்சிலிர்த்து போனார். இரண்டாம் வகுப்பு மாணவியும் சரி… ஐந்தாம் வகுப்பு மாணவனும் சரி… பத்தாம் வகுப்பு மாணவரும் 12 ஆம் வகுப்பு மாணவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கும் வகையில் அறிவியல் படைப்புகளை மிகத் துல்லியமாக கண்காட்சியில் இடம்பெறவைத்து அதற்கான சிறப்பான விளக்கத்தை நடுவர்களிடம் விளக்கம் அளித்தது பார்ப்போரை மிகவும் கவர்ந்தது. மாணவ மாணவிகளின் இந்த உணர்வுபூர்வமான அறிவியல் படைப்புகளை கண்டு பெற்றோர்களும் பார்வையாளர்களும் குறிப்பாக நடுவர்களும் மிகவும் பிரமித்து ப் போய்விட்டனர்.
பிற்பகலில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியின் பரிசளிப்பு விழாவில் நஜியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளி நிறுவனர் ஆடிட்டர் ஹபிபுல்லா கான் தலைமையில் பள்ளியின் தாளாளர் மாணவ மாணவிகளின் அறிவியல் வழிகாட்டி பவ்சுல்ஹனியா முன்னிலை வகித்தார். இதில் அறிவியல் படைப்பில் நவீன வேளாண்மை இயந்திரம் படைப்பு சிறந்த படைப்பாக தேர்வு செய்யப்பட்டது.
சிறப்பு விருந்தினர்கள் மற்றும் நடுவர்கள் ஆன இளம் விஞ்ஞானி திருமணி செல்வம் டாக்டர் முகமது இப்ரம்ஸா, உமர் ஷரீப் ஆகியோர் அறிவியல் கண்காட்சி சிறந்த படைப்புகள் படைத்த கே ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பிரிவில் மாடியில் மழை பாதுகாப்பு ரூப் கண்டுபிடித்த மாணவர்களுக்கு முதல் பரிசும் மண்ணில் மாசு படுவதை கண்டுபிடிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த மாணவர்களுக்கு இரண்டாம் பரிசும் ஸ்மார்ட் டஸ்ட்பின் கண்டுபிடித்த மாணவர்களுக்கு மூன்றாம் பரிசும் சாலை விபத்தில் இருந்து தவிர்ப்பது குறித்த கண்டுபிடிப்பு மாணவர்களுக்கு நான்காம் பரிசும் ஐந்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் அறிவியல் படைப்புகளில் ஹெர்பல் பிளான்ட் கண்டுபிடித்த மாணவிகளுக்கு முதல் பரிசும் ஆர்கானிக் வீட்டு உபயோக பொருட்கள் கண்டுபிடித்த மாணவிகளுக்கு இரண்டாம் பரிசும், ஆர்கானிக் பூச்சிக்கொல்லி குறித்த அறிவியல் படைப்புக்கு மூன்றாம் பரிசும் வழங்கி கௌரவித்தனர். இளம் விஞ்ஞானி திருமணி செல்வம் பேசும்போது, நஜியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளின் அறிவியல் படைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. இந்த சின்ன வயதில் ஒவ்வொருவரும் மிகவும் நேர்த்தியாக அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து கண்காட்சியில் வைத்திருந்தது மிகவும் பாராட்டுதலுக்குறியது. பள்ளி தாளாளர் அறிவியல் குறித்து மாணவ மாணவிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளும் தேவையான அனைத்து விதமான உதவிகளும் செய்து அவர்களை நல்ல முறையில் உருவாக்கியுள்ளார் என்பதை இந்த கண்காட்சி மூலம் காண முடிகிறது. கண்டிப்பாக இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் வருங்காலத்தில் மிகப்பெரிய சாதனையாளர்களாக வருவார்கள் என்பதில் துளியும் ஐயமில்லை,
இவ்வாறு பேசினார்.
பள்ளி முதல்வர் ராதா வரவேற்றார். அறிவியல் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் உதயா, குரு லட்சுமி, பிரியா மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் பள்ளி அலுவலக அலுவலர்கள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.