அரியலூர், நவ;09
அரியலூர் மாவட்டத்தில் சிறிய அளவிலான கைத்தறி பூங்காவினை அமைக்கும் பொருட்டு துணிநூல் துறையின் தமிழ்நாடு பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான இடத்தை
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி,
போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டம், செங்குந்தபுரம் பகுதியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமையவுள்ள இடத்தினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை அரசு செயலர் அமுதவள்ளி, அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கும்பகோணம் சரகம் 14.12.1998 முதல் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தஞ்சாவூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கிய 48 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுடன் செயல்பட்டு வருகிறது.
கும்பகோணம் சரகத்திற்குட்பட்ட அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டம். செங்குந்தபுரம் பகுதியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்காவினை அமைக்கும் பொருட்டு செங்குந்தபுரத்தில் அமைந்துள்ள துணிநூல் துறையின் தமிழ்நாடு பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான 13,205.83 சதுர அடி இடத்தில் செயல்படாமல் உள்ள விசைத்தறி கூடத்தின் இடத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், போக்குவரத்து துறை அமைச்சர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து தனியார் திருமண மஹாலில் நடைபெற்ற அரியலூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப்பின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2023-24 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் 10 சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஜெயங்கொண்டத்தில் நான்காவதாக சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதலாவதாக மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக கட்டடம் பழுது பார்க்கும் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் முதற்கட்டமாக 50 விசைத்தறிகளும் அதனைத் தொடர்ந்து கூடுதல் கட்டடம் அமைத்து மேலும் 50 விசைத்தறிகளும் அமைக்கப்படும். இப்பணிகளை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமி;ழ்நாடு முதலமைச்சர் அவர்களின் எண்ணம் நெசவாளர்களுக்கு முறையான ஊதியம் கிடைக்க வேண்டும் என்பதாகும். தற்போது நடைபெற்று வரும் சிறிய ஜவுளி பூங்காக்கள் மூலமாக ரூ.1000 முதல் ரூ.1200 வரை நாளொன்றுக்கு ஊதியமாக நெசவாளர்களுக்கு கிடைக்கப்பெறும்.
மேலும். இங்கு நெய்யப்படும் துணிகள் விற்பனை செய்யப்படும்போது கிடைக்கும் இலாபத்தில் ஒரு பங்குகள் நெசவாளர்களின் குடும்பத்திற்கு கிடைத்திட வழிவகை செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அரியலூரில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் அமைவதற்கான இடம் குறித்து ஆய்வு செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, கும்பகோணம் சரக உதவி இயக்குநர் ராஜேந்திரன், அரசு அலுவலர்கள். கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்கள். நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்