நாகர்கோவில் அக் 31
கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்வணிகத்துறை சார்பில் வேளாண் விளைபொருட்களை அக்மார்க் தரம்பிரித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் நாகர்கோவில் மாநில அக்மார்க் தரம்பிரிப்பு ஆய்வகத்தின் வேளாண்மை அலுவலர் (வேதியியல்) ஜோசப் ராஜேஷ் வரவேற்புரை ஆற்றினார்.
இப்பயிற்சியில் வேளாண் துணை இயக்குநர் (வேளாண்வணிகம்) எஸ்.கீதா
அக்மார்க் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். மத்திய அரசின் விற்பனையாக்கம் மற்றும் ஆய்வு இயக்குநரக மதுரை மண்டல முதுநிலை விற்பனை அலுவலர் ஹரிஷ் அக்மார்க் பொருட்களை தரம்பிரிப்பது, பகுப்பாய்வு செய்வது குறித்து எடுத்துக்கூறி செயல்விளக்கம் அளித்தார்.
மாநில அக்மார்க் தரம்பிரிப்பு ஆய்வக வேளாண்மை அலுவலர் ஜோசப் ராஜேஷ் அக்மார்க் திட்டத்தில் புதிய கட்டுமானர் ஆவதற்கான வழிமுறைகளை எடுத்துக்கூறினார். மேலும், அக்மார்க் முத்திரையுடன் வரும் பொருட்கள் அனைத்தும் தரத்திற்கும், சரியான எடைக்கும் கலப்படமற்ற தன்மைக்கும் அரசு உத்தரவாதம் அளிக்கிறது என விளக்கிக் கூறினார். கன்னியாகுமரி விற்பனைக்குழு செயலாளர் விஷ்ணப்பன் வேளாண் விளைபொருட்களை திேசய வேளாண் சந்தையில் விற்பனை செய்யும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார்.
மின்னணு வேளாண்சந்தையில் வியாபாரிகள் விளைபொருட்களை கொள்முதல் செய்வது பற்றியும். விளைபொருட்களின் தரம் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் தரத்தை ஆய்வு செய்வது குறித்து வேளாண்மை அலுவலர் சங்கரநாராயணன் எடுத்து கூறினார். மின்னணு வேளாண் பரிவர்த்தனை குறித்தும், பண்ணை வாயில் வர்த்தகம் குறித்தும் அதனை மேற்கொள்ளும்
முறை குறித்தும் தரம்பிரிப்பு பகுப்பாய்வாளர் நடராஜன் எடுத்துக்கூறினார். பயிற்சியின்
முடிவில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.