தென்தாமரைகுளம்., நவ. 3.
குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்யும் என வானிலை ஆராச்சிமையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து தென்தாமரைகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளான பூவியூர்,அகஸ்தீஸ்வரம், முகிலன்குடியிருப்பு, சாமிதோப்பு, கரும்பாட்டூர்,வடக்கு தாமரை குளம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதலே வெயில் இல்லாமல் கருமேகங்கள் திரண்டு வானம் மேகமூட்டமாகவே காட்சியளித்தது . இந்நிலையில் நண்பகல் 12. 30 மணிக்கு திடீரென கன மழை பெய்தது. சாரல் மழையாக தொடங்கிய மழை சுமார் 3 மணி நேரம் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கியது. கனமழை பெய்ததால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சாரல் மழை நீடித்ததால் இந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்புகள், வாழை தோட்டங்களையும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.