கன்னியாகுமரி நவ 3
கன்னியாகுமரியில் தீபாவளி பண்டிகை விடுமுறை ஒட்டி கடந்த இரு நாள்களாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாள்கள் தொடா் விடுமுறை விடப்பட்டதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாப் பகுதிகளிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக, கேரளம் மற்றும் வடமாநில பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.
கடந்த இருநாள்களாக மேகமூட்டம் காரணமாக அதிகாலை சூரிய உதயம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், நேற்று அதிகாலை சூரிய உதயம் தெளிவாகத் தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர் . மேலும், முக்கடல் சங்கமத்தில் நீராடி மகிழ்ந்தனா்.
விவேகானந்தா் மண்டபத்துக்கு காலை 8 மணிமுதல் படகுகள் இயக்கப்பட்டதால் நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள் உற்சாகத்துடன் படகுப் பயணம் மேற்கொண்டனா்.மேலும், சூரிய அஸ்தமனப் பூங்கா, காந்தி மண்டபம், வட்டக்கோட்டை, அரசு சுற்றுச்சூழல் பூங்கா, மருந்துவாழ்மலை உள்ளிட்ட பகுதிகளிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. பயணிகள் பாதுகாப்பு கருதி மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவின் பேரில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.