திருநெல்வேலி அக் 16
திருநெல்வேலி காவல் சரகத்தின் மாதாந்திர ஆய்வுக்கூட்டமானது காவல் சரக அலுவலகத்தில் வைத்து காவல் துறைத்துணைத்தலைவர் முனைவர் பா.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது . இதில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி,
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரடியாகவும், அம்மாவட்டங்களைச் சேர்ந்த
கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களும், துணைக்காவல் கண்காணிப்பாளர்களும் கானொலி
வாயிலாகவும் கலந்து கொண்டனர்.
இக்கலந்தாய்வு கூட்டத்தில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட சட்டம் ஒழுங்கு
பிரச்சனை சம்மந்தப்பட்ட வழக்குகள், சொத்து சம்மந்தப்பட்ட வழக்குகள், பெண்கள் மற்றும்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொடுங்குற்ற வழக்குகள், வன்கொடுமை தடுப்பு சட்ட
வழக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, புலன்விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளில்
நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பிற்குள் இறுதி அறிக்கை தயார் செய்யவும், வழக்கினை விரைவாக
நீதிமன்ற கோப்பிற்கு எடுத்து நீதிமன்ற விசாரணையை துரிதமாக நடத்த தேவையான
நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், சரித்திர பதிவேடு உள்ள
நபர்களையும், பிரச்சனைக்குரிய நபர்களையும் கண்காணித்து சட்டம் ஒழுங்கினை சீராக பேணி
பாதுகாத்திட அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மேலும், இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவிருக்கும் தேவர் குரு பூஜை, சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் மருது சகோதரர்கள் நினைவு தினம் ஆகியவற்றை முன்னிட்டு மாவட்டங்களில் செய்யப்படவிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாத வகையில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் சென்ற மாதம் சிறப்பாக காவல்
பணிபுரிந்த காவல் அலுவலர்கள், காவல் ஆளிநர்கள் உட்பட 48 பேரைப் பாராட்டி அவர்களுக்கு
நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஏ.சுந்தரவதனம், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
வி.ஆர். ஸ்ரீனிவாசன், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன், ஆகியோர் கலந்து
கொண்டனர்.