நாகர்கோவில் அக் 14
குமரி மாவட்ட முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் நாட்டில் ரயில் விபத்துக்கள் அதிகரித்திருப்பதாகவும் அந்த குரல்கள் பிரதமரின் செவிக்கு எட்டுகிறதா என்று பிரதமரை முன்னிறுத்தி எழுப்பியுள்ள கேள்விக்கு பாஜக சிறுபான்மை பிரிவு நிர்வாகி சதீஷ் ராஜா பதிலடி.
பாஜக சிறுபான்மை பிரிவு மாநில பொதுச் செயலாளர் சதீஸ் ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நாட்டில் ரயில் விபத்துகள் அதிகரித்திருப்பதாகவும், அந்த குரல்கள் பிரதமரின் செவிக்கு எட்டுகிறதா? என்றும் பிரதமரை முன்னிறுத்தி கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ். நாட்டில் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின்பு தான் மனோ தங்கராஜ் வசிக்கும் குமரிமாவட்டத்திற்குக் கூட இரட்டை ரயில் பாதை திட்டம் வந்தது.
காலையில் சென்னையில் டீ குடித்துவிட்டு ரயில் ஏறினால் மதியம் சாப்பிட குமரிக்கு வந்துவிடக் கூடியவகையில் வந்தே பாரத் ரயில் சேவை வந்தது. இப்படி பாஜக சாதிக்கும் போதெல்லாம் மனோதங்கராஜ் கண்களை இறுக்கமாக மூடிக்கொள்வார் போல் இருக்கிறது. சிக்னல் கோளாறின் காரணமாக நடக்கும் ரயில் விபத்துகள் உள்ளபடியே மிகவும் வேதனையளிக்கிறது. முந்தைய காங்கிரஸ் அரசுடன் ஒப்பிட்டால் இப்போது ரயில் விபத்துகள் கணிசமாகக் குறைந்துள்ளது.
ஆனால் ரயில் விபத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யும் மனோதங்கராஜ்க்கு திமுக அரசு வான் சாகச நிகழ்ச்சியின் போது பார்வையாளர்களுக்கு குடிக்கத் தண்ணீர் கூட வைக்காமல் இருந்த விசயம் தெரியுமா? அல்லது தெரியாதது போல் நடிக்கிறதா? குடிக்க தண்ணீர் கிடைக்காத தாகத்திலும், வெயிலின் தாக்கத்திலும், அரசின் அலட்சியப் போக்கினாலும் 5 பேர் துள்ளத்,துடிக்க மரணித்தது முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு நினைவில் இல்லையா? குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மனிதர் இறக்கும் அளவுக்கு மோசமான ஆட்சியை செய்து வருகிறது திமுக.
மனோதங்கராஜ் ரயில் விபத்து, மரணம் குறித்து கேள்வி எழுப்பும் நேரத்தில் தனக்கு ஓட்டுப்போட்ட குமரி மக்களைக் குறித்து சிறிதளவுகூட சிந்திக்கவில்லை. குமரிமாவட்டத்தில் கட்டுப்பாடு இன்றி, அதிகபாரத்துடன் செல்லும் கனரக வாகனங்களால் பல உயிர்கள் தேசிய நெடுஞ்சாலையில் பரிதாபமாக இறந்து போயுள்ளனர். அதையெல்லாம் மிக எளிதாக மறந்தும், மறைத்தும் கடந்து போகிறார் மனோதங்கராஜ். குமரியின் இயற்கை வளங்கள் அவர் அமைச்சராக இருந்த காலத்திலும், இப்போதும் கட்டுக்கடங்காமல் கேரளம் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அதையும், அதனால் ஏற்படும் விபத்துக்களையும் குறித்து விவாதிக்க மனோதங்கராஜ் தயாராக உள்ளாரா?
விபத்து என்பது எதிர்பாராமல் நடப்பது. அது அனைவருக்கும் வேதனைதரும் விசயம். அதில் எல்லாம் மனோதங்கராஜ் அரசியல் செய்து குளிர்காய நினைத்தால் பாஜகவினர் தக்க பதிலடி கொடுப்போம்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.