மலேசியா நாட்டில் தமிழ் பேசும் இளைஞரான பிரபாகரன் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். 28 வயதான இவர் மலேசியாவில் இளம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்கள் நாட்டு பிரதமர் இந்தியர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட மித்ரா என்ற (Malaysiyan Indian transformation unit) சிறப்பு குழுவிற்கு என்னை தலைவராக நியமித்துள்ளார்.
இக்குழுவிற்கு மலேசியா அரசாங்கம் ரூ.10 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் மலேசியாவில் வசிக்கும் 20 லட்சம் இந்தியர்களுக்கான பொருளாதார மற்றும் மறுமலர்ச்சி திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவது தான் இத்துறையின் நோக்கம்.
எங்களுடைய பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் சில மாதங்களுக்கு முன்பு இந்திய பிரதமர் மோடியை சந்தித்தோம். சர்வதேச வர்த்தகம், திட்டங்கள் குறித்து அவரிடம் பேசினோம்.
கடந்த 7 ஆண்டுகளாக மலேசியாவில் இருந்து யாரும் இந்திய பிரதமரை சந்தித்ததில்லை. எங்களது இப்போதைய பிரதமர் மூலம் தான் அது சாத்தியமாயிற்று. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே ஒரு சுமூகமான நல்லுறவு உருவாகி இருக்கிறது. பொருளாதார ரீதியாகவும் வர்த்தகம், முதலீடு போன்றவற்றில் இந்தியாவும் மலேசியாவும் இரு மார்க்கத்திலும் நிறைய திட்டங்களை உருவாக்க உள்ளோம். இந்திய அரசாங்கம் இதன் மூலம் பல நல்ல திட்டங்களை எங்களுக்கு வழங்கியிருக்கிறது. அதற்காக இந்தியாவிற்கு நன்றி சொல்கிறோம். இந்தியாவிலிருந்து மலேசியா வரும் மக்களுக்கு விசா இலவசம் என்ற நடைமுறையை இரு நாட்டுப் பிரதமர்களும் சேர்ந்து உருவாக்கி இருக்கிறார்கள்.
இது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் சுற்றுலா மேம்படும் என்று கருதுகிறோம் என்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.