கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளான அரசம்பட்டி, புலியூர், நெடுங்கல் உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்று படுகையில் அதிக அளவு தென்னை பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் தேங்காய்கள் மட்டை உரிக்கப்பட்டு குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு அதிள அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சராசரியாக மட்டை உரிக்கப்பட்ட தேங்காய் டன் ஒன்றுக்கு ரூ.26 ஆயிரம் முதல் ரூ.28 வரை எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.55 ஆயிரம் முதல் ரூ.56 ஆயிரம் வரை விவசாயிகளிடமிருந்து எடுக்கப்பட்டு வருகிறது. வடமாநிலங்களில் தொடர் பண்டிகை காரணமாக தேங்காய்க்கு தேவை அதிகரித்ததன் காரணமாகவே இந்த விலையேற்றம் கண்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வரலாறு காணாத இந்த விலையேற்றம் காரணமாக விவசாயிகள் ஏக மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதுகுறித்து பேருஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி திருப்பதி அவர்களிடம் கேட்டபோது, எங்கள் பகுதியில் விவசாயிகளே மரத்திலிருந்து தேங்காய்களை பறித்து மட்டை உரித்து விவசாயிகளிடம் கொடுத்து விடுவோம். அன்றைய விலை நிலவரப்படி அவர்கள் பணத்தை கொடுத்துவிட்டு எடுத்து சென்று விடுவார்கள். ஆனால் வரலாறு காணாத அளவுக்கு தற்போது டன் ஒன்றுக்கு ரூ.55 ஆயிரம் கொடுத்து எடுத்து செல்கின்றனர். இதனால் ஓரளவுக்கு தேரிய தேங்காய்களைக்கூட பறித்து கொடுத்துவிட்டோம் என தெரிவித்தார். இதே விலை நிலை நீடித்தால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி கொள்வார்கள் என தெரிவித்தார்.