நாகர்கோவில் செப் 13
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளின் நலன் கருதி, கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தாழக்குடி பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் கொண்டு வரப்பட்டது. இதன் வாயிலாக இறச்சகுளம், தாழக்குடி, திருப்பதிசாரம், பீமநகரி, வெள்ளமடம், தோவாளை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் உற்பத்தி செய்து அறுவடை செய்யும் நெல் மூட்டைகளை, விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து கொடுப்பார்கள். அதற்கு குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரத்து 300-ம், ஊக்கத் தொகையாக ரூ. 105-ம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
தற்போது விவசாயிகளை பாதிக்கின்ற வகையில் அரசு கொள்முதல் செய்யும் நெல் 17 சதவீதம் மட்டுமே ஈரப்பதம் இருக்க வேண்டும். அதற்கு மேல் ஈரப்பதம் இருந்தால் நெல் கொள்முதல் நிலையங்கள் ஏற்க மறுக்கிறது. மேலும் இந்நெல் மூடைகளை அதிகாரிகள் வாங்க மறுக்கிறார்கள். இதனால் விவசாயிகள் தங்கள் நெல்லை தனியார் ஆலைக்கு கொண்டு செல்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. தாழக்குடியில் அமைந்துள்ள அரசு நெல் கொள்முதல் நிலையம் மேற்கூறப்பட்ட விதி முறைகளால் வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் தங்களது வியர்வை சிந்தி உழைத்த உழைப்பின் பயனாக கிடைக்கப் பெற்ற நெல் மூடைகளை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். விவசாயிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்டது தான் நெல் கொள்முதல் நிலையங்கள். ஈரப்பதத்தை காரணம் காட்டி, நெஞ்சில் ஈரம் இல்லாமல் விதிமுறைகளை காரணம் காட்டி அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்யாமல் இருப்பது விவசாயிகளை மீளா துயரில் ஆழ்த்துவதாகும்.
இந்நிலை மாற்றப்பட வேண்டும். அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்களை கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும். அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலும் அதிக அளவில் நடைபெறும். கடந்த பிப்ரவரி, மார்ச் மாதத்தில் தாழக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் 16 ஆயிரத்து 380 நெல் மூடைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஈரப்பதத்தை காரணம் காட்டி விவசாயிகளை வேதனை படுத்துவது இழுக்காகும். இச்செயல் கண்டிக்கத்தக்கதாகும். இதைப்போன்று கடுக்கரை, திட்டுவிளை, செண்பகராமன்புதூர்ள மற்றும் பறக்கை பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களிலும் இதே நிலை தான் உள்ளது. உடனடியாக அரசு தலையிட்டு வேளாண்மைத்துறை மூலம் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்படும் நெல் மூடைகளின் ஈரப்பதம் 22 சதவீதம் வரை இருக்கலாம் என்ற நிலையை உருவாக்கி விவசாயிகளின் நலனை பாதுகாக்க உதவிடுமாறு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.