கரூர் மாவட்டம் – ஆகஸ்ட் – 24
கரூர் மாவட்டத்தில் ரூ.1.62 கோடியில் 3 புதிய கால்நடை மருந்தக கட்டிடங்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கரூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தரகம்பட்டி, பஞ்சப்பட்டி, தோகைமலை ஆகிய கால்நடை மருந்தக கட்டிடங்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கால்நடை மருந்தக கட்டிடங்களை கலெக்டர் மீ.தங்கவேல் குத்து விளக்கேற்றி வைத்து, சேவைகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் முன்னிலை வகித்தார். இந்த கால்நடை மருந்தக கட்டிடங்கள் தலா ரூ.54 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ.1.62. கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த 3 கால்நடை மருந்தகங்கள் மூலமாக 12 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 10 ஆயிரம் மாடுகள், 8 ஆயிரம் செம்மறி ஆடுகள், 11 ஆயிரம் வெள்ளாடுகள் மற்றும் இதர கால்நடைகள் பயனடையும். பஞ்சப்பட்டி மற்றும் தோகமலை கால்நடை மருந்தகங்களை கலெக்டர் மீ.தங்கவேல், குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் ஆகியோரும், தரகம்பட்டி கால்நடை மருந்தகத்தை கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரியும் மக்கள் பயன்பாட்டிற்கான சேவையை தொடங்கி வைத்து கால்நடை வளர்ப்போருக்கு தாது உப்புகளை வழங்கினர். இந்த விழாவில் கரூர் மாவட்ட மண்டல இணை இயக்குனர் சாந்தி, துணை இயக்குனர் பாஸ்கர், உதவி இயக்குனர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்புத் துறை உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.