சர்வதேச அளவில் சிறந்த கராத்தே வீரர்களை உருவாக்குவதே எங்கள் இலக்கு – ஜேக்கப் தேவகுமார்.
சென்னை, ஆகஸ்ட்- 23 , தென்னிந்திய கராத்தே சம்மேளனத்தின் சார்பாக 3 வது தென்னிந்திய மாநிலங்கள் அளவிலான கராத்தே போட்டிகள் சென்னை சாந்தோமில் உள்ள மான்ஃபோர்ட் பள்ளியின் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது…
தென்னிந்திய கராத்தே சம்மேளனத்தின் தலைவர் ஜேக்கப் தேவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கராத்தே போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சார்ந்த 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ராம்தயாள் மற்றும் நடுவர் ஆணைய தலைவர் அல்தாஃப் ஆலம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த ஆறு மாநிலங்களுக்கு இடையிலான கராத்தே போட்டிகளில், தமிழ்நாடு கராத்தே விளையாட்டு சங்கம் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களை சார்ந்த கராத்தே சங்கங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஜூனியர், சப்ஜூனியர், 21 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் சீனியர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கீழ் நடைபெற்ற இந்த கராத்தே போட்டிகளை மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த கராத்தே போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய சம்மேளனத்தின் தலைவர் ஜேக்கப் தேவகுமார் கூறுகையில்:-
இன்று மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு அவர்களால் தொடங்கப்பட்டு 2 நாட்கள் நடைபெறும் இந்த கராத்தே போட்டிகளில் தென்னிந்தியாவை சேர்ந்த ஆறு மாநிலங்களை சார்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு, தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர் .
இந்தியாவில் வருங்காலங்களில் சர்வதேச அளவில் சிறந்த கராத்தே வீரர்களை உருவாக்குவதற்கான தங்களின் சம்மேளனத்தின் சார்பாக தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.