நாகர்கோவில் ஆக 11
பாஜக சிறுபான்மைப் பிரிவு மாநில பொதுச் செயலாளர் சதீஸ் ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கன்னியாகுமரி மாவட்டத்தின் ஜீவாதாரமாக இருப்பது பேச்சிப்பாறை அணையாகும். குமரிமாவட்டத்தின் பாசனத் தேவையை பூர்த்தி செய்வது இந்த அணைதான். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ஆம் தேதி, பேச்சிப்பாறை அணைத் தண்ணீரானது விவசாயிகளின் பாசனத் தேவைக்காகத் திறக்கப்படும்.
அந்தவகையில் வழக்கம்போல் கடந்த ஜூன் 1 ஆம் தேதியும் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் தோவாளை சானலுக்கு மட்டும் தண்ணீர் விடவில்லை. காரணம், தோவாளை சானலுக்கு உட்பட்ட தூவச்சி பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, அதை சீரமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இந்தப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வந்ததால் தோவாளை சானலுக்கு தண்ணீர் வழங்க முடியவில்லை. இருந்தும், தோவாளை சானலில் வழக்கம்போல் தண்ணீர் வரும் என நம்பி விவசாயிகள் நாற்றங்கால் பாவியிருந்தனர். தண்ணீர் வராததால் பயிர்களும் கருகிப் போனது.
தண்ணீர் வரத் தாமதமாகும் என விவசாயிகளுக்கு முறைப்படி தெரிவிக்கவும் இல்லை. இதனால் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டசபையில் நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் இருபது நாள்களில் தூவச்சி பகுதியில் சானல் சீரமைப்பு பணிகள் முடிந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்று அறிவித்தார். ஆனால் அதன்பின்னரும் திமுக அரசின் மெத்தனத்தால் பணிகள் மெதுவாக நடந்ததால் தோவாளை சானலில் தண்ணீர் வரவில்லை.
தூவச்சிப் பகுதியில் உடைப்பு சரிசெய்யப்பட்டு கடந்த 7 ஆம் தேதிதான் தோவாளை சானலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதுவே ஒருமாதத்திற்கும் மேல் தாமதம் ஆகும். இந்நிலையில் இப்போது தண்ணீர் திறந்துவிட்டாலும், தோவாளை சானலின் கடைமடை பகுதிவரை தண்ணீர் சென்று சேரவில்லை. இதனால் பயிர்கள் கருகிப் போய் உள்ளது. இனி தண்ணீர் சென்றாலும் கூட நெற்பயிர்களைக் காப்பாற்ற முடியாது என்பதே இப்போதைய நிலமை. இதேபோல் தோவாளை சானலை நம்பி விவசாயம் நடந்துவந்த 6000 ஏக்கர் பரப்பில் நெற்பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் வழியாக, ஆட்சியர் ஆய்வுசெய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது