மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு ஸ்ரீ அஞ்சல்நாயகி அம்பிகை சமேத ஸ்ரீ ஆலந்துறையப்பர் சுவாமி திருக்கோயில் உள்ளது. மராட்டிய மன்னன் சரபோஜி அமாவாசை தினத்தன்று இவ்வாலயத்தில் பந்தல் அமைத்து சாப தோஷம் நீங்க சிவ பூஜை செய்த தலமாகும். புகழ்வாய்ந்த இவ்வாலயத்தில் 18 ஆம் ஆண்டு 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை விழா விமரிசையாக நடைபெற்றது.
உலக நன்மை வேண்டியும், கிராமம் செழிக்கவும் குடும்பத்தினர் சுபிட்சமாக வாழவும் பிரார்த்தனை செய்த பெண்கள் மாங்கல்ய பலம் தழைக்கவும், கன்னி பெண்கள் திருமணவரம் வேண்டியும் நல்லெண்ணெய், காமாட்சி விளக்கு, ஐந்து முக குத்துவிளக்கு, தலைவாழை இலை, தாலி கயிறு, பச்சரி, தேங்காய், பூ, வாழைப்பழம், சூடம், வெற்றிலை பாக்கு, எலுமிச்சை உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைத்து திருவிளக்கிற்கு மஞ்சள், குங்குமத்தால் பூஜைகள் செய்தனர். தொடர்ந்து பிரசாதம் வைத்து திருவிளக்கிற்கு தீபாரதனை செய்து வழிபாடு நடத்தினர். பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு மங்களப்பொருட்கள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.