நாகர்கோவில் ஜூலை 31
குமரி மாவட்டம், திருவட்டார் பகுதியில் உள்ள பாரதப்பள்ளி குன்னத்துவிளையைச் சேர்ந்தவர் ஜாக்சன் 38, இவர் திருவட்டார் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார். இவரது மனைவி உஷாகுமாரி திருவட்டார் பேரூராட்சி 10-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார். இவர்களுக்கு அஸ்ரின் ஜெனிலியா மற்றும் அஸ்லின் ஜெஸ்லியா என இரு குழந்தைகள் உள்ளனர்.
ஜாக்சன் தனக்கு சொந்தமான டெம்போ வாகனத்தை ஓட்டி வருகிறார். வெள்ளாங்கோடு புன்ன மூட்டுவிளையைச் சேர்ந்த ராஜகுமார் என்ற விலாங்கன் சில வருடங்களாக ஜாக்சனிடம் டிரைவராக வேலை செய்துவந்துள்ளார். இதற்கிடையே அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு பிரிந்துள்ளனர். மேலும், கடந்த டிசம்பர் மாதம் ஜாக்சனின் காரை ராஜ்குமார் உடைத்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக இரு தரப்பினரும் போலீஸில் புகார் அளித்திருந்தனர். இதனால் இருவருக்கும் முன் விரோதம் ஏற்ப்ட்டுள்ளது. இதையடுத்து கடந்த 27-ம் தேதி இரவு அந்தோணியார் குருசடி அருகே சென்ற ஜாக்சனை, இரண்டு பைக்குகளில் வந்த 6 பேர் அரிவாளால் வெட்டியும், கம்பியால் அடித்தும் படுகாயம் ஏற்படுத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ஜாக்சனை அப்பகுதியினர் மீட்டு ஆற்றூரில் உள்ள தனியார்மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததுடன், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 28-ம் தேதி ஜாக்சன் மரணமடைந்தார். குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகி கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், தாரகை கத்பர்ட் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கடந்த 2 நாள்களாக போராட்டம் நடத்தி வந்தனர். தமிழகத்தில் அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு இல்லை என காங்கிரஸார் குற்றம்சாட்டினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இக்கொலையில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய ஐந்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் ஜாக்சன் கொலை வழக்கில் தொடர்புடையமுக்கிய குற்றவாளிகள் இருவரை தனிப்படை போலீசார் 29-ம் தேதி கைது செய்தனர். தலைமறைவாக இருந்த மேலும் ஒரு கொலை குற்றவாளியை நேற்று தனிப்படையினர் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “முன்விரோதம் காரணமாக காங்கிரஸ் கட்சியின் திருவட்டார் பேரூர் இளைஞரணி தலைவர் ஜாக்சன் கொலை நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ராஜகுமார் உள்ளிட்ட 9 பேர் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை தனிப்படையினர் தேடி வருவதாக தெரிவித்தார்.