வன்னியர் மக்கள் கட்சி வேண்டுகோள்.
ஆம்பூர், ஆக:1-
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் கனிம வள கொள்ளை தொடர்ந்து நடந்து வருகிறது. இதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டுமென வன்னியர் மக்கள் கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் G.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் தொடர்ந்து பாலாற்றில் கலக்க விடுவதால், நிலத்தடி நீரும் , நமது மண்ணும் தொடர்ந்து மாசடைந்து வருகிறது. அதனால் நமது சொந்த மண்ணில் இருக்கும் நிலத்தடி நீரை நாம் பருக முடியாத அவலம் இருந்து வருகிறது.
நமது பகுதி நிலத்தடி நீரை பருக முடியாமல், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் வரும் குடிநீரையே அன்றாடம் நம்பி இருக்க வேண்டிய அவல நிலைக்கு நாம் தள்ளப்பட்டு உள்ளோம்.
இந்நிலையில் நமது ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இப்போது அன்றாடம் கனிமவள கொள்ளை நடந்து வருகிறது. பாலாற்றில் மணல் கடத்தல், வருவாய்த் துறைக்கு சொந்தமான இடங்களிலும், வனப்பகுதிகளின் ஓரங்களிலும் இப்போது அதிக அளவில் மண் கடத்தலும் நடந்து வருகிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய வருவாய்த்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறையினர் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர்.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நமது திருப்பத்தூர் மாவட்டத்தில் கௌண்டன்யா வன விலங்குகள் சரணாலய காப்பு காடுகளில் யானைகள் , சிறுத்தைகள் ,கரடிகள் , மான்கள், காட்டு பன்றிகள் என பல்வேறு வனவிலங்குகள் அதிக அளவில் காணப்படுகிறது. வனப்பகுதியை ஒட்டி அதலபாதாளத்தில் சுரங்கம் போல் தோண்டி மண் எடுத்து வருவதால், வன விலங்குகள் இந்த பள்ளங்களில் விழுந்து உயிரிழக்கும் அபாயமும், பெருங்காயங்கள் ஏற்பட வாய்ப்புகளும் உண்டு.
பொதுப்பணித்துறை ,
கனிமவளத்துறை ,
வருவாய்த் துறையினரிடம் முறையாக அனுமதி பெறாமல், இந்த கனிம வள திருட்டு நடந்து வருவது இப்போது ஊடகங்கள் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே நமது திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடரும் இந்த கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டுமென வன்னியர் மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் ” என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.