தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தெற்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து

முடிக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் மண்டலம் வாரியாக கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த மக்கள் குறை தீர்க்கும் முகாமை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் அதிமுக கவுன்சிலர் வெற்றிச்செல்வன் தங்கள் வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய், சாலை, உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமியிடம் கோரிக்கை மனு அளித்தார்.
தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 15 வார்டுகளை சேர்ந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு சொத்து வரி, சொத்துவரி பெயர் மாற்றம், திருத்தங்கள், புதிய குடிநீர் இணைப்பு,தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொதுச் சுகாதாரம், உரிமை ஆணை கட்டணங்கள், தொழில்வரி, பாதாள சாக்கடை உள்ளிட்ட மாநகராட்சி சேவை குறித்து கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.
இதைத்தொடர்ந்து வாரம் தோறும் ஒவ்வொரு மண்டலங்களிலும் இந்த குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் தெற்கு மண்டல தலைவர் வழக்கறிஞர் பாலகுருசாமி, துணை ஆணையர் ராஜாராம், உதவி ஆணையர் கல்யாணசுந்தரம், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் முத்துவேல், மேயர் நேர்முக உதவியாளர் ஜேஸ்பர், பிரபாகர், மேயர் அலுவலக உதவியாளர் ரமேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.