மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா 6 கீழையூர் கிராமத்தில் நஞ்சை நிலம் ரெண்டேகால் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பட்டா நிலத்தில் மண் குவாரி அமைக்க விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. ஆட்சேபனை இருந்தால் அறிவிப்பு வெளியிட்ட ஏழு தினங்களுக்குள் தரங்கம்பாடி வட்டாட்சியரிடம் எழுத்துப்பூர்வமாகவோ அல்லது நேரிடையாக தெரிவிக்கலாம் என்று கீழையூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் அறிவிப்பு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கீழையூர் செல்லக்கோவில் விவசாயிகள் இன்று மனு அளித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;
கீழையூர் கிராமத்தில் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில் மண் குவாரி அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், குடியிருப்பு பகுதி அருகாமையிலேயே மண்குவாரி அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் மூலமாக மண்ணைக் கொண்டு செல்லும்போது விபத்து சாலைப்பழுது, புழுதிப் பறந்து சுவாச பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக குற்றம் சாட்டி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் புதிய மண் புகாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்து அனுமதி வழங்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கிராமமக்கள் மற்றும் விவசாயிகளை ஒன்று திரட்டி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.