நாகர்கோவில் ஜூலை 29
குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வந்து செல்வதற்கும், பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதற்கும், இடையூறாக பேருந்து நிலையத்தின் முக்கிய பகுதிகளில் அனுமதி இன்றி இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் இதனால் பேருந்து ஓட்டுநர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்ததின் அடிப்படையில். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பையா பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அகற்றி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி இருந்தார். அவரின் அறிவுறுத்தலின்படி போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் தனது தலைமையிலான போக்குவரத்து ஒழுங்கு பிரிவு உதவி ஆய்வாளர் சுமித் ஆல்ட்ரின் மற்றும் காவலர்களுக்கு வடசேரி பேருந்து நிலையத்தில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக அனுமதி இன்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார். எனவே உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் வடசேரி பேருந்து நிலையம் வந்து அங்கு அனுமதி இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் இப்பகுதியில் இருசக்கர வாகனம் நிறுத்த கூடாது என்றும் பேருந்து வந்து செல்வதற்கும், பேருந்தில் பயணம் செய்வதற்காக வரும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் இப்பகுதியில் வாகனங்களை நிறுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.