திருப்பூர் ஜூலை: 29
சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் அவிநாசி ரோட்டரி சங்கம் இணைந்து அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் போதை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்புரை ஆற்றினார், அவிநாசி ரோட்டரி சங்க தலைவர் தண்டபாணி முன்னிலை வகித்தார், சிறப்பு விருந்தினராக அவிநாசி காவல் ஆய்வாளர் பாரதி ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆய்வாளர் பேசுகையில், போதைப் பொருள்கள் பயன்பாடு தற்போது முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது, இதனால் இளைய தலைமுறையினர், குறிப்பாக மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை பாதிக்கிறது, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், அதன் தொடர் விளைவுகள் குறித்து மாணவ, மாணவிகளிடம் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், தற்போதைய சூழலில் இது மிகவும் அவசியம் என்று பேசினார். அவிநாசி ரோட்டரி சங்க கவர்னர் தேர்வு பூபதி, சுப்புராஜ், பாலசுப்பிரமணியம், பாலசந்தர், மெகாகதிர், ஜீவா, செயலாளர் சங்கீதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பிறகு மாணவச் செயலர்கள் மது கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, நவீன்குமார், திவாகர், கோகுல் ஆகியோர் தலைமையில் போதை விழிப்புணர்வு நடனமும், நாடகமும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியாக அவிநாசி ரோட்டரி சங்க பொருளாளர் ரமேஷ் நன்றியுரை கூறினார். நிகழ்வில் ஏராளமான பொது மக்கள், மாணவ மாணவிகள், காவல் துணை ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், முருகலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.