மதுரை ஜூலை 26,
மதுரை மாவட்டம் மகளிருக்கான விடியல் பயண திட்டம்” எங்களின் பொருளாதார சுமையை குறைக்கிறது.
பயணடைந்த கல்லூரி மாணவி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மகிழ்வுடன் நன்றி.
தொழிற்சாலை பெருக்கம், வணிகம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வேலை வாய்ப்புகளை விரைந்து பெறுவதற்கு போக்குவரத்து சிறப்பாக இருப்பது முக்கியம். அதேபோல பெரும்பாளான பொதுமக்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் போன்ற பொது போக்குவரத்தையே சார்ந்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு, அரசு போக்குவரத்து கழகங்களின் மேம்பாட்டிற்காகவும் கிராமப்புறங்களை முக்கிய சாலைகளுடன் இணைக்கும் இணைப்புச் சாலை மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்த 1996 – 2001 ஆட்சிக் காலத்தில் நான்கரை ஆண்டுகளில் மட்டும் 9,477 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு 1468 புதிய வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டன. கிராமப்புற மக்கள் வேலைக்குச் சென்றுவர வசதியாக மினி பஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு, 2,334 மினி பஸ்கள் இயக்கப்பட்டன.
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொதுமக்களின் அன்றாட வாழ்கையில் அரசு போக்குவரத்து கழகங்கள் மிக முக்கிய பங்கு வகித்து வருவதை உணர்ந்து போக்குவரத்து துறையை இலாப நோக்கில் அல்லாமல் சேவை நோக்ககோடு செயல்படுத்தி வருகிறார். பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சாதாரணப் பேருந்து. விரைவுப்பேருந்து மற்றும் குளிர்சாதனப் பேருந்துகளை என பல்வேறு பேருந்து சேவைகளை இயக்கி வருகின்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்கள் நகர், புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் பேருந்து சேவையை இயக்கி வருகின்றது. இக்கழகத்தில் உள்ள பணிமனைகளின் எண்ணிக்கை 40. மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 2363 மற்றும் வரையறுக்கப்பட்ட சேவைகளின் எண்ணிக்கை 2,171 மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 12,857 ஆகும். இக்கழகம் மேலும். நாளொன்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட இயக்க தூரம் 9.78 இலட்சம் கிலோமீட்டர் ஆகும். இதனால், மாதத்திற்கு 293,40 இலட்சம் கிலோ மீட்டர் தூரம் இயக்கம் செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 10.61 இலட்சம் பயணிகளும், மாதம் ஒன்றுக்கு 318.30 இலட்சம் பயணிகளும் பயன்படும் வகையில் வழித்தட சேவைகள் இப்போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 07.052021அன்று மகளிருக்காக விடியல் பயணத்திட்டம், நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகை வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மதுரை கோட்ட இயக்கப் பகுதிகளான மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மகளிர் தினந்தோறும் சுமார் 6 இலட்சம் பயனாளர்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 44,65 இலட்சம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இதன் மூலம் மாதம் ஒன்றிக்கு மகளிருக்கு சுமார் 1000 ரூபாய் வரை சேமிப்பு ஏற்பட்டு பொருளாதாரம் மேம்படுகிறது. மேலும் 500 நபர்களுக்கு மேல் மக்கள் தொகையைக் கொண்ட அனைத்து கிராமங்களுக்கும் இக்கழகம் பேருந்து சேவையினை தொடர்ந்து செய்து வருகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக 2022 – 2023 மற்றும் 2023 – 2024ஆம் ஆண்டிற்கான அரசு நிதியில் 2000 புதிய பேருந்துகளும், 2024-2025-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு அறிக்கையில் 3,000 புதிய பேருந்துகளும், ஜெர்மன் நிதி மூலம் 2,666 பேருந்துகளும் என மொத்தம் 7,686 பேருந்துகள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், மதுரை கோட்டத்திற்கு 695 பேருந்துகளும், ஜெர்மன் நிதி மூலம் 473 பேருந்துகளும் என மொத்தம் 1168 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2022 – 2023 மற்றும் 2023 – 2024 ஆண்டிற்கு மதுரை மண்டலத்திற்கு 388 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முதற்கட்டமாக 55 புதிய பேருந்துகள் தொடங்கப்பட்டு, தொடர்ந்து, படிப்படியாக 157 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மதுரை மண்டலத்தில் இதுவரை 212 புதிய பேருந்துகள் இயக்கம் செய்யப்பட்டு வருகிறது. மகளிருக்கான விடியல் பயணம் திட்டத்தின்கீழ் பயனடைந்த மதுரை கிழக்கு வட்டத்தை சேர்ந்த செல்வி.தி.யாழினி தெரிவித்ததாவது:-
நான் மதுரை கிழக்கு வட்டத்தில் எனது பெற்றோருடன் வசித்து வருகிறேன். எனது பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். நான் கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிப்பை முடித்து. தற்போது, மதுரை மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஆங்கிலம் பாடப்பிரிவை தேர்வு செய்து தற்போது மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். தினமும் கல்லூரிக்கு அரசு பேருந்திலேயே போய் வருகிறேன். தமிழ்நாடு அரசு செயல் படுத்திவரும் மகளிருக்கான விடியல் பயண திட்டத்தின் மூலம் எனது மாதாந்திர போக்குவரத்து செலவு மிச்சமாகிறது. இதனால் எனது பெற்றோருக்கு பொருளாதார சுமையை குறைக்கிறது. இத்திட்டத்தை அறிவித்து செயல்படுத்திவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தொகுப்பு
இசாலி தளபதி எம்.ஏ.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், மதுரை,
மகயிலைச் செல்வம், பி.இ.
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி), மதுரை