நாகர்கோவில் ஜூலை 24
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்திலிருந்து உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில் அஞ்சல் துறை ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு ஓட்டம் இன்று நடைபெறும் என அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது :-
ஆகஸ்ட் 3-ம் தேதி இந்திய உடல் உறுப்பு தான தினமாக அனுசரித்து வருகிறோம் . எனவே இந்த உடல் உறுப்பு தான தினத்தினை முன்னிட்டு பொதுமக்களுக்கு உடல் உறுப்பு தானம் குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்திய அஞ்சல் துறை சார்பாக விழிப்புணர்வு ஓட்டம் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்திலிருந்து இன்று 24.07.2024 காலை 7 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி முன்னிலையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் 100 தபால் ஊழியர்கள் மற்றும் நாகர்கோவில் ஹிந்து கல்லூரியில் இருந்து சுமார் 50 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உடல் உறுப்பு தானம் குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்க உள்ளனர் . நடைபெறும் விழிப்புணர்வு ஓட்ட தொடக்க நிகழ்ச்சியினை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி தலைமை தபால் நிலையத்திலிருந்து கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். நடைபெறும் விழிப்புணர்வு ஓட்டமானது நாகர்கோவில் தலைமை தபால் நிலையதில் இருந்து தொடங்கி – டவர் சந்திப்பு – வேப்பமூடு சந்திப்பு முடித்து மீண்டும் அதே வழியாக அஞ்சலகம் வந்தடையும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.