ராமநாதபுரம், ஜுலை 21-
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முருகன், மாவட்டச் செயலாளர் முத்து ராமலிங்கம் ஆகியோர் கூட்டாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தின் சார்பாக ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து தங்கள் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் ஆணி வேராக உள்ள ஊராட்சி செயலாளர்கள் பதிவு எழுத்தர்கள் நிலையில் ரூ.15900- 50400 ஊதிய விகிதத்தில் காலம் முறை ஊதிய கட்டிற்கு 2018 ஆம் ஆண்டு அரசாணை எண் 171 நாள் 30.11.2018 மூலம் கொண்டுவரப்பட்டனர். ஆனால் இன்றுவரை ஊராட்சி செயலாளர்கள் தமிழக அரசின் பென்சன் திட்டத்தில் இணைக்கப்படவில்லை. சிறப்பு காலம் வரை ஊதியம் பெற்று வந்தபோது வழங்கப்பட்ட ஓய்வூதிய தொகையான ரூபாய் 2000 மட்டுமே இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது. ஊராட்சி செயலாளர்கள் தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க பல்வேறு மனுக்கள் கொடுத்தும் இன்று வரை தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. இதை ஊதிய கட்டில் மாநில நிதி குழு மானியத்தில் ஊதியம் பெரும் ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவு எழுத்தர்களுக்கு தமிழக அரசின் ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அதே ஊதிய விகிதத்தில் ஊதியம் வாங்கும் ஊராட்சி செயலாளர்களுக்கு இதுவரை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கப்படவில்லை. 2018 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக இச்சலுகை விடுபட்டுள்ளது. பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று ஒற்றை கோரிக்கையை மட்டும் வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுப்பது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது சென்னையில் பெருந்திரள் முறையீடு நடத்துவது என மாநில பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
முதற்கட்டமாக ஆகஸ்ட் 21 2024 புதன்கிழமை அன்று மாநில ம் முழுவதும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியரகம் முன்பாக மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும்,
இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 27 2024 வெள்ளிக்கிழமை அன்று சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பாக மாநில அளவிலான பெருந்திரள் முறையீட்டு இயக்கம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒற்றை கோரிக்கை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு மாவட்டத் தலைவர் மற்றும் மாவட்டச் செயலாளர் ஆகியோர் கூட்டு அறிக்கையில் கூறியுள்ளனர்.