கிருஷ்ணகிரி ஜூலை 20: ஜூலை 17ம் தேதி சர்வதேச குற்றவியல் நீதிக்கான தினமாக கடைபிடிக்க பட்டு வருகிறது. இது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி திருமதி.சுமதி சாய் பிரியா கலந்துக் கொண்டு தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர், சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் , பிற அமைப்புகளும் மக்களுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோகம், இன படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற நிகழ்வுகளில் பாதிக்கபட்ட மக்களுக்கு நியாயமான நீதி வழங்குவதை உறுதி செய்வது இந்த தினத்தின் நோக்கமாகும். கடுமையான குற்றங்கள், அதனால் ஏற்பட்ட நீதி தவறுகள் குறித்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் நம்பகமான தீர்வை பெற்றுக்கொடுக்க அனைவரும் அற்பணிப்புடன் செயல்பட வேண்டும். குற்றங்கள் விசாரணையை வேகப் படுத்தவும், மனித உரிமைகளை மேம்படுத்தவும் இன்றைய தினம் நமக்கு நினைவூட்டுகிறது. அனைவரும் இணைந்து இந்த தினத்தில் உறுதி ஏற்போம் என்று கூறினார்.
இந்த நிகழ்வில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.