நாகர்கோவில் ஜூலை 20
தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு பொதுச்செயலாளரும், குமரி மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவருமான வழக்கறிஞர் ஜாண் சௌந்தர், தமிழக கவர்னர், முதலமைச்சர், தலைமைச்செயலாளர், காவல் துறை இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பிய புகாரில் தெரிவித்துள்ள விவரங்களாவது..
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டு, தமிழக மக்கள் மத்தியில் குறிப்பாக காங்கிரஸ் பேரியக்க நண்பர்கள், இளைஞர்கள் என எல்லாரிடமும் நல்மதிப்பினைப் பெற்று நல்ல முறையில் கட்சிப்பணி செய்து வருகின்றார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பேரியக்கம் 100 சதவீத வெற்றி பெற்றிடும் நிலைக்கு கட்சியினை முன்னெடுத்துச்சென்று, தமிழக இந்தியக்கூட்டணிக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக விளங்கினார்.
மேலும், செல்வப்பெருந்தகை சாதாரண நிலையிலிருந்து தனது கடின உழைப்பால் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக உயர்ந்து தற்போது தமிழக காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைமைப்பொறுப்பினை பெற்றிருக்கிறார்.
அவரின் பேச்சுக்கள் மிகவும் நேர்த்தியாகவும், அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையிலும் இருக்கும். எவரையும் காயப்படுத்தும் வகையில் அவர் ஒருபோதும் பேசியதில்லை. நாள்தோறும் அவருக்கு அதிகரித்துவரும் செல்வாக்கினால், வெறுப்படைந்த தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவரான அண்ணாமலை கடந்த 09.07.2024-ம் தேதி சென்னையில் வைத்து, பத்திரிக்கையாளர்களிடம் செல்வப்பெருந்தகை புகழை கெடுக்கும், கெட்ட எண்ணத்தில், அவதூறான, வேண்டாத கருத்துகளை தெரிவித்தார்.
அண்ணாமலை இப்படி நடந்துகொள்வது இது முதல்முறை அல்ல. பத்திரிக்கையாளர்கள், காவல்துறையினர், மாற்று கட்சியினர் என எல்லாரையும் மோசமாக பேசி பத்திரிக்கை விளம்பரம் பெறுவதனை வாடிக்கையாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.
தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தனது தலைமையிலான பாஜக மரண தோல்வியினை பெற்றதனை மறைக்கும் விதமாக தற்போது செல்வப்பெருந்தகையை தனிமனித தாக்குதல் செய்து பேசியது மிகவும் வன்மையாகக்கண்டிக்கத்தக்கது. அவரது அருவருக்கத்தக்க பேச்சு இரண்டு கட்சிகளுக்கிடையில் தமிழக அளவில் மிகப்பெரிய பிரச்சனைகளை எற்படுத்தும் வகையில் உள்ளது. அப்படி நடந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்படும். ஆகவே, இவரது இத்தகைய வன்மம் கொண்ட பேச்சுகளுக்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அண்ணாமலை பாஜக தலைமைப்பொறுப்பினை ஏற்ற பின்னர் அவரது கட்சியில் குற்றப்பின்னணியம் கொண்ட பலரை உடன் வைத்திருப்பது, தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய வன்முறையினை உருவாக்கிவிடுமோ என்று தமிழக மக்கள் மனதில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
இந்திய தேசத்திற்கும், எதிர்கால இந்திய இளைஞர்களின் வழிகாட்டுதலுக்கும் தலைவர் ராகுல்காந்தியின் பங்கு மிகவும் முக்க்கியமானது. அதேபோன்று, தமிழக காங்கிரசின் தொண்டர்கள் மற்றும் தமிழகத்தின் ஆரோக்கிய அரசியலுக்கும் செல்வப்பெருந்தகை பணி மிகவும் அவசியமானது. எனவே, அவருக்கு எந்தவித தீங்குகளும் நேராது பாதுகாக்கவேண்டுவது காலத்தின் கட்டாயம்.
ஆகவே, குற்றப்பின்னணியம் கொண்டவர்களை தன்னுடன் வைத்துக்கொண்டுள்ளார் என்ற மமதையில் வன்மத்துடன் பேசிய அண்ணாமலை மீது தகுந்த நடவடிக்கை எடுத்திடுமாறும், காங்கிரஸ் பேரியக்கத்தின் தமிழ்நாடு தலைவர் வழக்கறிஞர் கு.செல்வப்பெருந்தகை-க்கு தமிழகத்தின் உயர்மட்ட காவல்துறை பாதுகாப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.