அரியலூர், ஜூலை:19
அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த கூட்டத்தை, ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் அதிமுக, திமுக, பாமக உறுப்பினர்கள் அனைவரும் புறக்கணித்தனர்.
அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக் கூட்டரங்கில் வியாழக்கிழமை உறுப்பினர்கள் குழுக் கூட்டம் நடைபெறுவதாக அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து வியாழக்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்த அதிமுக வைச் சேர்ந்த ஒன்றியக் குழுத் தலைவர் செந்தமிழ்ச்செல்வி , தேமுதிகவைச் சேர்ந்த துணைத் தலைவர் சரஸ்வதி மற்றும் திமுக, பாமக வைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும், கூட்ட அரங்குக்குச் செல்லாமல், தலைவர் அறையிலேயே பேசி விட்டு, கூட்டத்தை புறக்கணிப்பதாகக் கூறி அலுவலகத்திலிருந்து வெளியேறினர்.
இதுகுறித்து, கூட்டத்தை புறக்கணித்த அதிமுக, தேமுதிக, பாமக, திமுக உறுப்பினர்கள் கூறுகையில், அரியலூர் காவலர் சிற்றுண்டி அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சொந்தமான இடத்தில், உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தாமல் ஒருவருக்கு கடை ஒதுக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவதில்லை .
தங்களிடம் சில தீர்மானங்களை எழுதி கையெழுத்து பெற்ற பிறகு இடையிடையே அதில் சில தீர்மானங்களை அதிகாரிகள் எழுதியுள்ளனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கணித்துள்ளதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் தெரிவித்தது: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சொந்தமான இடத்தில், உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தாமல் ஒருவருக்கு கடை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது ஏற்றுக் கொள்ளகூடியதாக இல்லை. கடந்த 18.5.2023 அன்று நடைபெற்ற கூட்டத்தில், கடை ஒதுக்குவது தொடர்பான தீர்மானத்தில் ஒன்றியக் குழுத் தலைவர் உள்பட அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திட்ட பிறகு தான் கடை ஒதுக்கப்பட்டது.
ஒர் ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை, அதன் புத்தகத்திலிருந்த பக்கங்களை உறுப்பினர் சுந்தரவடிவேல் கிழித்து தெறிந்துள்ளார். அவர் கிழித்துள்ள பக்கத்தில், வளர்ச்சித் திட்டப் பணிக்கான தீர்மானங்களும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது. தீர்மான நகலை கிழத்தெரிந்தது குற்றச் செயலாகும். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும். அனைத்து உறுப்பினர்களுக்கும், தங்களது வார்டு பகுதி வளர்ச்சிக்கு சரிசமாக நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்