மதுரை ஜூலை. 14,
அழகர்கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
மதுரை மாவட்டம் அழகர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றி புகழப்படும் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடி பிரம்மோற்சவ விழாவும் தனி சிறப்புடையது. இந்த ஆடிப்பெருந் திருவிழா நேற்று காலை 8 மணி அளவில் மங்கல இசையுடன் தங்க கொடிமரத்தில் கருடன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியேற்றப்பட்டு தோரணமாலைகள் அணிவிக்கப்பட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று இரவு அன்ன வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் புறப்பாடு நடைபெறும். இன்று காலையில் தங்க பல்லக்கிலும் இரவு சிம்ம வாகனத்தில் புறப்பாடும். 15ம் தேதி காலையில் வழக்கம் போல் சுவாமி புறப்பாடும், அன்று இரவு அனுமார் வாகனத்திலும் 16ம் தேதி இரவு கெருட வாகனத்திலும் 17ம் தேதி காலை 6.45 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பெருமாள் பல்லக்கில் புறப்பாடாகி மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு போய் எழுந்தருளி திரும்புவார். அன்றிரவு சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடும். 18ம் தேதி இரவு யானை வாகனத்திலும் 19ம் தேதி காலையில் சூர்னோத்சவம், அன்றிரவு புட்பச் சப்பரமும் நடைபெறும். 20ம் தேதி இரவு குதிரை வாகனத்திலும் எழுந்தருள்வார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத் திருவிழா 21ம் தேதி அன்று நடைபெறுகிறது. இதில் காலை 5.15 மணிக்கு மேல் 5.35 மணிக்குள் சுவாமி தேருக்கு எழுந்தருளள் நடைபெறும். பின்னர் காலை 6.45 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல், அன்றிரவு புட்ப பல்லக்கும் நடைபெறும். மேலும் தொடர்ந்து அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப் பௌர்ணமி நிறை நாளன்று
மாலையில் திறக்கப்பட்டு திருக்கதவுகள் படிகளுக்கும் 18 படி பூஜை செய்து தீபாராதனைகள் காண்பித்து கதவுகளுக்கு சந்தனம் சாத்துப்படியாவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும்
ஆடித் தேரோட்டத்தன்று மாலையில்
பதினெட்டாம்படி கதவுகள்
திறக்கப்பட்டு படி பூஜைகள் செய்து
தீபாராதனைகள் காண்பித்து சந்தனம் சாத்துதல் நிகழ்ச்சி நடைபெறும். 22ம் தேதி சப்தவர்ணம், புஷ்பசப்பரம். 23ஆம் தேதி உற்சவ சாந்தி. அதைத்தொடர்ந்து 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை அன்று மாலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கெருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
இத்துடன் ஆடிப்பெருந்திருவிழா நிறைவு பெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் கலைவாணன் மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில்
பணியாளர்கள், அறங்காவலர்கள் குழுவினர்கள் செய்து வருகின்றனர்.