சங்கரன்கோவில். ஜூலை.13.
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்த மூக்கன் மனைவி மாரியம்மாள்(55) என்ற நோயாளிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும், கந்தசாமி என்ற 85 வயது முதியவருக்கு
இடது தொடை எலும்பு முறிவு அறுவை சிகிச்சையும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டது. தாலுகா அளவிலான மருத்துவமனையில் இது போன்ற அறுவை சிகிச்சைகள் சங்கரன்கோவிலில் அரசு மருத்துவமனையில் செய்திருப்பது இதுவே முதல் தடவையாகும். இந்நிலையில் அறுவை சிகிச்சைகள் செய்து மருத்துவமனையில் உள்ள மாரியம்மாள் மற்றும் கந்தசாமியை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் .தொடர்ந்து மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகளின் தரம் குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து ராஜா எம்எல்ஏ உடன் பேசிய நோயாளிகள் முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்று தற்போது தாங்கள் நல்லபடியாக நடக்கும் அளவிற்கு உடல்நிலை முன்னேறி உள்ளது எனவும், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனைத்து வகையான சிகிச்சைகள் மேற்கொள்ள பல்வேறு வசதிகளை செய்து கொடுத்த தமிழக முதல்வருக்கும், சுகாதாரத் துறை அமைச்சருக்கும் ,ராஜா எம்எல்ஏ விற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து இந்த சிகிச்சை அறுவை சிகிச்சைகளை செய்வதற்கு உறுதுணையாக இருந்த சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா மற்றும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை தலைமை குடிமை மருத்துவர் டாக்டர் செந்தில் சேகர், அறுவை சிகிச்சைகள் மேற்கொண்ட எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்கள் விஸ்வநாத் பிரதாப் சிங் ,முத்துராமன், மயக்கவியல் நிபுணர்கள் டாக்டர்கள் அர்ச்சனா ,ஜெயபாஸ்கர், பாலசுப்ரமணியன், யோகாம்பிகை, மற்றும் செவிலியர்கள், உதவியாளர்களுக்கு ராஜா எம்எல்ஏ நன்றி தெரிவித்துக் கொண்டார். நிகழ்வின் போது சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மேலநீலதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை மற்றும் பணி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உடன் இருந்தனர்.