பரமக்குடி, ஜூலை.13: பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 171 கல்லூரிகளில் சுமார் 7000 திற்கு மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேல் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், தொடர்ந்து தமிழக அரசிடம் கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரம், அரசு ஆணை 56, யு ஜி சி நிர்ணயம் செய்துள்ள ரூ. 50,000 மற்றும் உதவி பேராசிரியர் பணி இடத்திற்கு 2019 அரசாணையை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு யுஜிசி நிர்ணயம் செய்துள்ள சம்பளம் ரூ.50,000 மற்றும் நிலுவைத் தொகையை நீதிமன்ற உத்தரவின் படி வழங்க வேண்டும். கௌரவ விரிவுரை அவர்களே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பரமக்குடி அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் சுழற்சியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.
பட விளக்கம் பரமக்குடி அரசு கலை கல்லூரியில் நீதிமன்ற உத்தரவின்படி சம்பளம் வழங்க வேண்டும் எனக் கூறி கௌரவ விரிவுரையாளர்கள் வாயில் துணியை கட்டிக் கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்