திருப்பத்தூர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் துணை அலுவலரை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில்
பாராபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு! திருப்பத்தூர் பத்திரிக்கையாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர்: ஜூலை:1, திருப்பத்தூர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து திருப்பத்தூர் பத்திரிக்கையாளர் சங்கத்தின் மற்றும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு இணைந்து பாரத ஸ்டேட் வங்கி எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்து தற்போது திருப்பத்தூர் மாவட்டம் உருவாகிய நிலையில் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக சுப்பையா இருந்து வருகிறார். துணை மக்கள் செய்தி தொடர்பு அலுவலராக ஜனார்த்தனன் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏராளமான பத்திரிக்கை மற்றும் ஊடகத்தினர் இருந்து வரும் நிலையில் குறிப்பிட்ட சில செய்தியாளர்களுக்கு மட்டும் அரசு வழங்கும் சலுகைகளை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் பாராபட்சத்துடன் வழங்கி வருவதாக தெரிகிறது. இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட செய்தியாளர்கள் சங்கத்தின் மூலமாகவும், சில பத்திரிக்கையாளர்கள் நேரடியாகவும் சலுகைகளை பெற கேட்டுள்ளனர் ஆனால் பத்திரிக்கையாளர்களை அவமதிக்கும் விதமாக மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பையா ” இங்கு நான் சொல்வதுதான் , என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது , யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல்லுங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று தொடர்ச்சியாக சில பத்திரிக்கையாளர்களை மட்டும் குறி வைத்து பேசி வருகிறார். அரசு வழங்கும் சலுகைகளை பெறுவதற்கு விதிமுறை என்ன என்பதை கேட்டாலும் , சில பத்திரிக்கையாளர்களை மட்டும் உள்ளே அமர வைத்து பேசுவதும் வாடிக்கையாக இருந்து செயல்பட்டு வருகிறார். சம்பந்தப்பட்ட அலுவலரின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து 28.6.2024 – அன்றைய தினத்தில் திருப்பத்தூர் பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு கூட்டமைப்பு இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பத்தூர் பத்திரிக்கையாளர் சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். செயலாளர் சரவணன், பொருளாளர் முனீர்பிரான், து.செயலாளர் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் கணேசன், பொருளாளர் கன்னையா,இணைச் செயலாளர் பால்ராஜ் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றினர். கண்டன உரையின் போது பதினோரு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். கண்டன உரையில்: மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பையாவை மற்றும் துணை அலுவலரை பணி இடம் மாற்றம் செய்ய வேண்டும், பெரிய , சிறிய என்ற பாகுபாடின்றி அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் சலுகைகளை வழங்க வேண்டும், அரசு சார்பில் வழங்கும் அடையாள அட்டை, இலவச பேருந்து அட்டை, தேர்தல் அட்டை, நலவாரிய சேர்க்கை , வாட்சப் குழுவில் இணைப்பது, ஆர் என் ஐ அங்கிகாரம் பெற்ற அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் சலுகைகளை வழங்க வேண்டும், பத்திரிக்கையாளர்கள் அமரும் அறைக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவது, பாராபட்சம் இன்றி அனைத்து பத்திரிக்கையாளர்களிடம் சமத்துவமாக நடந்துக் கொள்வது, பத்திரிக்கௌயாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பினை வழங்க வேண்டும், நலவாரியத்தில் இணைப்பது ஆகிய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் ஆர்ப்பாட்டத்தின் மூலம் சம்மந்தப்பட்ட மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பையா மற்றும் துணை அலுவலர் வேறு மாவட்டத்திற்கு பணியிட மற்றம் செய்ய வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக தீர்வு கிடைக்காத பட்சத்தில் அடுத்த கட்ட கோரிக்கையாக மாண்புமிகு தமிழக முதலமைச்சரை சந்திப்பது, சம்மந்தப்பட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் அமைச்சர் மற்றும் செயலாளரை சந்தித்து கோரிக்கையினை வழங்கி காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக பேட்டியின்போது தெரிவித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்கள் அலாவுதின், சதிஷ், அருண்குமார், அஸ்லாம், லோகேஷ், விக்னேஷ், ஒளி ஜீவன் மாவட்ட செய்தியாளர் ராஜிவ் காந்தி ஆகியோர் கலந்துக்கொண்டனர். கண்டன உரையின் இறுதியாக பொருளாளர் முனீர்பிரான் நன்றியுரை வழங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கம்னிஸ்ட் கட்சியை சார்ந்தவர் ஆதரவு தந்து கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.