போச்சம்பள்ளி அருகே அகரம் கிராமத்தில் தனது சொந்த தேவைக்காக எவ்வித அனுமதி இன்றி ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் பைப் லைனிலிருந்து வீட்டிற்கு தண்ணீர் எடுத்த சென்ற ஊராட்சி துணை தலைவர் – 10 நாட்களாக அகரம் கிராம மக்கள் குடிநீரின்றி தவிப்பு ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகை
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற துணை தலைவர் பெரியண்ணன், தனது தேவைக்காக அனுமதி இன்றி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாயிலிருந்து நேரடியாக 2 இன்ச் பைப் லைன் அமைத்து தனது வீட்டிற்கு கொண்டு சென்றதால் கிராமத்திற்கான குடிநீர் தேவையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அகரம் கிராமத்தில் கடந்த 10 நாட்களாக தேவையான குடிநீர் இல்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர். ஊராட்சி தலைவரிடம் முறையிட்டத்தில் ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து சரியாக தண்ணீர் வருவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தீர விசாரித்தபோது, அகரம் ஊராட்சியின் துணை தலைவரான பெரியண்ணன் இரவோடு இரவாக ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாயிலிருந்து நேரடியாக 2 இன்ச் பைப் அமைத்து தனது வீட்டிற்கு கொண்டு சென்றிருப்பது கிராம மக்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி தலைவர் அறிவொளி இராமமூர்த்தி, துணை தலைவருக்கு தனிப்பட்ட முறையில் சென்ற பைப் லைனை துண்டிப்பு செய்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக மீண்டும் அதே இடத்தில் பைப் லைன் அமைத்துள்ளார் பெரியண்ணன். கோபம் கொண்ட பொது மக்கள் தாங்களாகவே பைப் லைனை துண்டிப்பு செய்தனர். இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் புதிய பைப் லைன் அமைத்ததால் கோபம் கொண்ட பொது மக்கள் இன்று அகரம் அருப்பு மில் அருகாமையில் ஊராட்சி மன்ற தலைவரை கிராம மக்கள் முற்றுகையற்றனர். அப்போது அங்கு வந்த நாகரசம்பட்டி காவல் துறையினர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, மீண்டும் பைப் லைனை துண்டிப்பு செய்து, ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் அதிகாரிகளிடம் முறையிட்டதையடுத்து கூட்டத்தினர் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரி சாந்தி அவர்களிடம் கேட்டபோது, நேற்று முன் தினம் துணை தலைவரிடம் நேரடியாக சென்று, ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயிலிருந்து தண்ணீர் எடுப்பது சட்டப்படி குற்றம் என தெரிவித்து எச்சரித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதே தவறை செய்துள்ளார். நாளை அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.