அரியலூர், ஜூன் 27:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத் துறை மற்றும் கிராம சமுதாய சுகதார செவிலியர் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் வியாழக்கிழமை நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களில், தாய்மை செவிலியர் பயிற்சி நிறைவு செய்தவர்களை பணியமர்த்த வேண்டும்.
மக்கள் தொகைக்கு ஏற்ப புதியதாக உருவாக்கப்பட உள்ள துணை சுகாதார நிலையங்களில் எம்.எல்.எச்.பி செவிலியர்களை பணியமர்த்தும் கருத்துருவை கைவிட்டு, கிராம சுகாதார செவிலியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். களப் பணிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க சமுதாய சுகாதார செவிலியர்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும். அதே போல் பழுதடைந்த கணினியை மாற்றி புதிய மடிக்கணினியும், கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியர்களுக்கு ஆன்ட்ராய்டு கைப்பேசிகளை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்தர் இராஜகுமாரி தலைமை வகித்தார்.செயல் தலைவர் க.கோமதி, மாநிலத் தலைவர் க.மீனாட்சி, பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ம.சந்தானலட்சுமி, பெரம்பலூர் நிர்வாகிகள் அ.பாலாம்பிகை, இரா.இந்திராணி, க. சந்திரா ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர்.
நிர்வாகிகள் இரா.இந்திராணி, ஆ.பாலாம்பிகை, ஜா.வளர்மதி, க.முருகேஸ்வரி, கலைச்செல்வி, ஜெயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்