அரியலூர்,ஜூன் 27:
அரியலூர் மாவட்டம், உதயநத்தம் கிராம மக்கள் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இக்கிராமத்தில் வசிக்கும் 1500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த ஆழ்துளை கிணறு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பழுதானது.
இதையடுத்து, மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறையை போக்க பிரதான சாலையிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டது.
தற்போது அந்த ஆழ்துளையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழுதாகி போனதால், அப்பகுதி மக்கள் குடிநீருக்காக 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள அய்யப்பன் தெருவுக்கு சென்று வந்தனர். அங்கு அந்த தெரு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த உதயந்ததம் கிராம மக்கள், வியாழக்கிழமை சிலால் ,அணைக்கரை சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்துச் சென்றனர்.