காரமடை, டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் நேற்று காலை 11.00 மணிக்கு உள்தர மதிப்பீட்டு அமைப்பு மற்றும் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக சர்வதேச யோகா தினக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மூன்றாம் ஆண்டு கணினிசார் வணிகவியல் துறை மாணவன் ப.சதீஷ் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர்.சி.என்.ரூபா அவர்கள் தலைமையேற்று தலைமையுரையாற்றினார். காரமடை, மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திரு.ஏ.எம்.ராஜ்குமார் அவர்கள் மற்றும் மனவளக்கலை மன்றத்தின் பொறுப்பாசிரியர் திரு.கே.முத்துசங்கர் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு யோகா கலைகளான மூச்சுப்பயிற்சி மற்றும் கைப்பயிற்சிகளை செய்துகாட்டி சிறப்புரையாற்றினர்கள். அவர்கள் பேசிய உரையில், “தினமும் காலையில் 45 நிமிடங்கள் யோகா பயிற்சி செய்வதால் உடல்நலம் மற்றும் மனநலம் மேம்படுகிறது. உடலில் இரத்த ஓட்டம் சீராகிறது. உடலில் கழிவுகள் நீங்கி தூய்மையான ஆக்ஸிஜனை சுவாசிக்க வழி வகுக்கிறது. இதனால் உடல் அமைதியாகி இரத்த அழுத்தம் குறைதல், நுரையீரல் சீராக இயங்குதல், நல்ல மூளைத்திறன், பதட்டமின்மை, இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல், ஆரோக்கியமான உடல் எடை, இதய ஆரோக்கியம், உணவு நன்கு செரிமானமாதல் போன்ற பல நன்மைகள் ஏற்படுகின்றன” என்று பல கருத்துக்களை எடுத்துரைத்தனர். நிகழ்வின் நிறைவாக கல்லூரியின் இரண்டாம் ஆண்டு கணினிசார் வணிகவியல் துறை மாணவி சி.காவியாஸ்ரீ நன்றியுரை கூறினார். இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திருமதி.உமாப்ரியா அவர்கள் செய்திருந்தார்.