நாகர்கோவில் ஜூன் 17
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான என், தளவாய் சுந்தரம் இஸ்லாமிய சகோதரர்களுக்கு பக்ரீத் பண்டிகை வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்திகள் அவர் கூறியிருப்பதாவது :-
அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துக்கள்
உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கியமான பண்டிகை பெருமைக்குரிய பக்ரீத் பண்டிகை ஆகும். இப்பண்டிகை தியாகத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இறை தூதர் இப்ராஹிம் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படும் ‘ஈத்உல்-அதா” என்றும் தியாகத் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.
பக்ரீத் பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இத்திருநாளில் சிறப்பு தொழுகையில் ஈடுபடும் இஸ்லாமியர்கள் அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்தளிப்பது வழக்கம்.
இந்நாளில் இஸ்லாமியர்கள் தொழுகைக்கு செல்லும் போது உறவினர்களையும், நண்பர்களையும் ஆரத் தழுவி, அன்பு செலுத்தி வாழ்த்துச் சொல்லும் சிறப்புமிகு பண்டிகையாக பக்ரீத் பண்டிகை திகழ்கிறது.
இப்பண்டிகை தியாகத்தின் வரலாறாக திகழ்கிறது. இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் இறுதி கடமையாக ஹஜ் பயணம் செல்வார்கள். ஹஜ் பயணம் செல்ல முடியாதவர்கள் இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் பொருட்டு ஹஜ் பயணம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக குர்பானி கொடுக்கப்படுகிறது. தன்னிடம் உள்ளதை துறப்பதற்கும், மற்றவர்களின் நலன் காக்க உதவுவதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பது அடிப்படைத் தத்துவமாகும். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து, உதவி புரிந்து மனிதத்துவத்தின் மாண்பினை காத்திட வேண்டியது நமது தலையாய கடமையாகும்.
அனைவருக்கும் கொடுத்து மகிழும் இப்பண்டிகை திருநாளில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய தியாகத் திருநாள் என்னும் பக்ரீத் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.