ஜூன் 4,
பாலும் தெளி தேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலம் செய் துங்கக் கரிமுகத்து தூமணியே
நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா
ஆன்மீக நூல்கள் அனைத்தும் பக்தியோடு தமிழ் இலக்கியத்தையும் வளர்த்தன, அவ்வாறு பாடப்பட்ட ஒரு நூலே மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்.பிள்ளைத் தமிழ் என்பது தமிழின் தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று. ஒரு குழந்தைப் பிறந்தது முதல் வளர்வது வரையான அணைத்து பருவங்களையும் பற்றிக் கூறுவது பிள்ளைத்தமிழ்.
பிள்ளைத்தமிழ் ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இரு வகைப்படும். காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர் என பத்துப் பருவங்களைக் கொண்டது. இதில் முதல் ஏழு பருவமும் ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் பொதுவானவை. சிறுபறை, சிற்றில், சிறுதேர் என்பது ஆண்பால் பிள்ளைத்தமிழ்க்கு உரியது. இம்மூன்று பருவங்களுக்குபப் பதிலாக கழங்கு, அம்மனை, ஊசல் என்ற மூன்று பருவங்கள் பெண்பால் பிள்ளைத்தமிழ்க்கு உரியவை. அன்பு தருவதிலே உனைநேர் ஆகும்ஓர் தெய்வம் உண்டோ என்று குறிப்பிடுவார் பாரதி. அன்பு செலுத்துவதற்கும் அன்பு பெறுவதற்கும் உரிய பருவம் குழந்தைப் பருவமே. புலவர்கள் தம் அன்புக்குரிய ஒருவரைக் குழந்தையாக வைத்துப் பாடிமகிழ்ந்தார்கள். இதுவே பிள்ளைத்தமிழ் ஆயிற்று இந்த வகையிலே குமரகுருபரர் மதுரையை அரசாளும் மங்கையற்கரசி அன்னை மீனாட்சியை குழந்தையாக பாவித்து இந்த மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நூலை இயற்றியிருப்பார். இந்த நூலானது பத்து பருவங்களையும் உள்ளடக்கி 102 பாடல்களைக் கொண்டது. தன்னுடைய ஐந்து வயது வரைப் பேசும் திறன் அற்றவராக இருந்த குமரகுருபரர் திருச்செந்தூர் முருகப் பெருமானின் அருளால் பேசும் திறன் பெற்றவர். அன்னையின் பிள்ளைத்தமிழ் நூலை மதுரையில் அன்னையின் ஆலயத்தில் அரங்கேற்றம் செய்யும் போது வருகை பருவம் பாடிய போது மீனாட்சி அம்மனே ஒரு சிறு குழந்தையாக வந்து ஒரு முத்து மாலையை பரிசாக அளித்தார். அத்துணை கலைநயமும் கேட்போர் உள்ளத்தை உருக்கும் வகையில் அமைந்திருக்கும் இப்பாடல் தொகுப்பு.
விநாயகர் வணக்கம்
கார்கொண்ட கவுள்மதக் கடைவெள்ள முங்கட்
கடைக்கடைக் கனலும்எல்லை
கடவாது தடவுக் குழைச்செவி முகந்தெறி
கடைக்கால் திரட்டஎங்கோன்
போர்கொண்ட எண்டோட் பொலன்குவடு பொதியும்வெண்
பொடிதுடி யடித்துவைத்துப்
புழுதியாட் டயராவொர் அயிராவ ணத்துலவு
போர்க்களிற் றைத்துதிப்பாம்
தார்கொண்ட மதிமுடி ஒருத்தன் திருக்கண்மலர்
சாத்தக் கிளர்ந்துபொங்கித்
தவழுமிள வெயிலுமழ நிலவுமள வளவலால்
தண்ணென்று வெச்சென்றுபொன்
வார்கொண்ட ணிந்தமுலை மலைவல்லி கர்ப்பூர
வல்லியபி ராமவல்லி
மாணிக்க வல்லிமர கதவல்லி அபிடேக
வல்லிசொல் தமிழ்தழையவே
விளக்கம்:
தார் என்று சொல்லக் கூடிய மலர்களால் கட்டப்பட்ட மாலையை அணிந்திருக்கின்ற
மதி முடி குளிர்ச்சி பொருந்திய சந்திரனைத் தன்முடியில் அணிந்திருக்கிற சிவபெருமான். முக்கண்ணன் என அறியப்படுபவர் சிவபெருமான் சூரியனை வலக்கண்ணாகவும், சந்திரனை இடக்கண்ணாகவும், நெருப்பை நெற்றிக்கண்ணாகவும் கொண்டவர். அன்பு, அறிவு, ஆற்றலின் அடையாளமாகக் கருதப்படுவது சிவபெருமானின் திருக்கண்கள்.
இவற்றுள் வலக்கண்ணும், இடக்கண்ணும் அம்மையின் திருமார்பின்மேற் படுவதால் ஒரே காலத்தில வெம்மையும் தண்மையும் ஓரிடத்துத் தோன்றுவதால் இளவெயிலும் மழநிலவுமாக வெண்மையும் குளிர்ச்சியும் கொண்ட திருமார்பினைக் கொண்ட மலைவல்லி (மலத்துவசன் அருமை மகள்), கற்பூரவல்லி, அபிராமவல்லி, மாணிக்கவல்லி, மரகதவல்லி, அபிஷேகவல்லி என்றழைக்கக் கூடிய மீனாட்சியம்மையை செம்மொழியான தமிழ் மொழியால் பாடப்படுகின்ற பிள்ளைத்தமிழ் நூல் சிறக்கும்படி காத்து அருள் புரிய வேண்டி விநாயக பெருமானை வேண்டுகிறார். கருநிறம் பொருந்திய கன்னத்தில் இருந்து பெருகுகின்ற மகத நீரும் கண்களினின்றுப் பிறக்கின்ற ஊழி காலத் தீயும் தங்களுக்கு வகுக்கப்பட்ட வரம்பை தாண்டாத படி தம் அகலமான குழைந்த காதுகளைக் கொண்ட விநாயக பெருமானை துதிப்போம். அயிரவணம் என்ற சிவபெருமானது யானையை போன்று போர் புரியவல்ல யானை முக கடவுளைத் துதிப்போம்.
மீனாட்சி அம்மை பிள்ளை தமிழ் பாடல்களை அடுத்த வாரப் பதிவில் காண்போம்
— திருமதி கு.வை.மங்கையற்கரசி ராஜ்நாராயணன்