நாகர்கோவில் ஜூலை 19
குழித்துறை நகராட்சி சார்பில் நடைபெற்ற 99வது வாவுபலி பொருட்காட்சி திறப்பு விழாவில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு பொருள்காட்சியை திறந்து வைத்து தொடக்க விழா பேருரை ஆற்றினார்.
குமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியின் 99 வது வாவுபலி பொருள்காட்சி துவக்க விழா நேற்று குழித்துறை நகராட்சி பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள விஎல்சி மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சியானது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது.
நடைபெற்ற நிகழ்ச்சிக்கு குழித்துறை நகராட்சி நகர மன்ற தலைவர் பொன். ஆசை தம்பி, நகர் மன்ற துணைத் தலைவர் பிரபின் ராஜா, குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராம திலகம் ஆகியோர் வரவேற்புரையாற்றினார். நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் விஜயலட்சுமி திட்ட விளக்க உரையாற்றினார். குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் தலைமை உரையாற்றினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் முன்னிலை உரையாற்றினார். குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம்,நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வழக்கறிஞர் மகேஷ், மாவட்ட வன அலுவலர் பிரசாந்த், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் தமிழரசி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குனர் ஆல்பர்ட் ராபின்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அனைத்து பணியாளர்கள் ஆகியோர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நடைபெறும் வாவு பலி பொருட்காட்சி திடலில் அறிவியல் கண்காட்சி, மரண கிணற்றில் மாருதி கார், மோட்டார் சைக்கிள் ஓடும் அற்புதக் காட்சிகள், ராட்சச ராட்டினம், லாம்போ , கொலம்பஸ், டிஸ்கோ, கோசர் கண்காட்சி, குழந்தைகள் ராட்டினம், நாகராணி ஷோ, பிரேக் டான்ஸ், சிலம்பம் விளையாட்டு, குழந்தைகள் வித்தியாசராட்டினம், விவசாய பொருள்கள், கைவினைப் பொருள்கள் கண்காட்சி, மின் அலங்கார கண்காட்சி மற்றும் பல அம்சங்கள் இடம் பெற இருப்பதாக பொருள்காட்சி ஒப்பந்ததாரர் பால்ராஜ் தெரிவித்தார். மேலும் தினமும் பொருட்காட்சி மைதானத்தில் மாணவ மாணவிகளின் கபடி போட்டியும் நடைபெறும். இப்பொருாட்சியைக் காண உள்ளூர் மட்டும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்தவர்களும் வந்து செல்வதற்காக நகராட்சி சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பொருட்காட்சி நடைபெறும் திடலில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கவும் மாவட்ட காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.