ஈரோடு அக் 8
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வசதியாக்கல் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் 85,000 க்கும் மேற்பட்ட உத்யம் பதிவு பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி, சேவை மற்றும் வியாபார சார்ந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஜவுளி தொடர்பு தொழில்கள். விவசாயம் உணவு சார்ந்த தொழில்கள், பிளாஸ்டிக், தென்னை நார் கயிறு, எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், தோல் பொருட்கள், கட்டுமானம் தொடர்புடையவை, என்ஜினியரிங், கெமிக்கல் இன்னும் பிற அடங்கும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள வங்கிகளுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரj தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க இந்நிதியாண்டு (2024-2025) இலக்காக ரூ.9521.34 கோடி என மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இவ்விலக்கினை அடைய அனைத்து வங்கிகளுக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து கடன் வசதியாக்கல் கடன் மேளா நடத்த மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்திருந்தார். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும் இன்னும் பிற வங்கிகள் கடன் வசதியாக்கல் முகாமை கடந்த இரண்டு காலாண்டிலும் நடத்தி வருகிறார்கள்.
கடந்த காலாண்டு முடிவில் ஈரோடு மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3650.30 கோடி கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இது ஆண்டு இலக்கீட்டில் 38.30% ஆகும். தொடர்ச்சியாக இரண்டாம்
காலாண்டிலும் கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு குறித்த காலத்தில் தாமதமின்றி நேரடி மற்றும் அரசின் திட்டங்களின் மூலம் கடன் வசதி செய்து தர வேண்டும் எனவும், இந்நிதியாண்டின் இலக்கினை அடைய
அனைத்து வங்கிகளின் பங்களிப்பினையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் வங்கி மேலாளர்கள் மற்றும்அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் 13 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.65.9357 கோடி கடன் அனுமதி மற்றும் பட்டுவாடா ஆணையினையும், மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும்புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், அண்ணல்
அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு
உருவாக்கும் திட்டம். வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்
திட்டம் பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் ஆகிய 5 திட்டங்களின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ.3.9975 கோடி கடன் அனுமதி பட்டுவாடா ஆணையினையும் என மொத்தம் 28 நிறுவனங்களுக்கு ரூ.69.93 கோடி
கடன் அனுமதி பட்டுவாடா ஆணையினை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் திருமுருகன்,
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜ்குமார், ரிசர்வ் வங்கி அலுவலர், மாவட்ட அளவிலான வங்கி உயர் அலுவலர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.