புதுக்கடை, செப்- 27
புதுக்கடை சுற்றுவட்டார பகுதிளில் உள்ள கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், போதை பாக்குகள் போன்றவை விற்பனை செய்வதாக புகார்கள் உள்ளன. போலீசார் அடிக்கடி சோதனை செய்து சம்மந்தபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் குன்னத்தூர் பகுதி தோட்டவாரம் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக புதுக்கடை தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் நேற்று காலை புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது கிருஷ்ணகுமார் (38) என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 56. 25 கிலோ கணேஷ் புகையிலை பொருட்கள், 8 கிலோ கூள் லிப் புகையிலை என மொத்தம் 64 கிலோ போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இவற்றின் மதிப்பு 36 ஆயிரத்து 400 ஆகும். மேலும் 8 ஆயிரத்து 110 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போதை பொருட்களை போலீஸ் நிலையம் கொண்டு வந்து, வழக்கு பதிவு செய்து, கிருஷ்ணகுமாரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா? எனவும் புதுக்கடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.