மதுரை அண்ணாநகர் ஜக்காதோப்பைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் 55. இவர் 1997ல் ரூ. 60 வழிப்பறி செய்ததாக தெப்பக்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தலைமறைவானார். இவர் மீது பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. வழக்குகளில் தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டன. உதவி கமிஷனர் சூரக்குமார் தலைமையில் சிறப்பு எஸ்.ஐ., க்கள் சந்தான பாண்டியன், பன்னீர்செல்வம் ஆகியோர் பழைய வழக்குகளை ஆய்வு செய்தனர். ஜக்கா தோப்புக்கு சென்று பன்னீர்செல்வம் குறித்து விசாரித்தபோது சிவகாசி பகுதியில் குடும்பத்துடன் வசிப்பது தெரிந்தது.
அங்கு உள்ளூர் போலீசார் மற்றும் தெப்பக்குளம் போலீசாருடன் சென்று மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆய்வு செய்வதாக கூறி பன்னீர்செல்வம் குடும்பத்தினரிடம் பெயர், விபரங்களை கேட்டு உறுதி செய்தனர். இதைதொடர்ந்து ஒயின் ஷாப்பில் வேலை செய்த பன்னீர்செல்வத்தை கைது செய்தனர். 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை கைது செய்த போலீசாரை கமிஷனர் லோகநாதன் பாராட்டினார்.