ஈரோடு மார்ச் 8
இந்திய தேர்தல் ஆணையத்தால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, இத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 05.02.2025 அன்றும், 08.02.2025 அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. இத்தேர்தலில் போட்டியிட்ட 46 வேட்பாளர்களும் தேர்தல் செலவின கணக்குகளை உரிய முறையில் தாக்கல் செய்துள்ளனர்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் பிரிவு 78-ன்படி, தேர்தல்களில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தனது தேர்தல் செலவினக் கணக்குகளை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 26 தினங்களுக்குள் அளிக்க வேண்டும். மேலும் இந்த தேர்தல் செலவின கணக்கு தாக்கல் ஒத்திசைவு 30 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் ரூ.40 இலட்சம் வரை செலவினம் மேற்கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறை செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 2025 தேர்தல் செலவின கணக்குகள் ஒத்திசைவு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் தேர்தல் செலவின பார்வையாளர் தினேஷ் குமார் ஜாங்கிட் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஈரோடு மாநகராட்சி ஆணையர் பொறுப்பு தனலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முஹம்மது குதுரத்துல்லா (பொது), வெங்கடராமன் (கணக்குகள்) மற்றும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.