கோவை செப்:14
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். விழாவில் மத்திய அரசின் பயிர் ரகங்கள் மற்றும் உழவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் திலோச்சன் மொஹபத்ரா முதன்மை விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் பட்டங்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 9 ஆயிரத்து 526 மாணவர்கள் இளமறிவியல், முதுநிலை பட்டமேற்படிப்பு மற்றும் முனைவர் பிரிவில் பட்டம் பெற்றனர். இதில் 3 ஆயிரத்து 415 மாணவர்கள் நேரடியாகவும், உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இருந்து 6 ஆயிரத்து 111 மாணவர்கள், தபால் மூலமாகவும் பட்டங்களைப் பெற்றனர். மேலும் வேளாண் முதுநிலை பட்டம் பெற்ற ப.அசன் முகம்மது அவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.