தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.265.15 கோடி மதிப்பீட்டில் 3வது சரக்கு தளத்தை இயந்திர மயமாக்குவது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில், பொது சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக, வடக்கு சரக்கு தளம் 3-ஐ இயந்திரமயமாக்குவதற்கான 30 வருட சலுகை ஒப்பந்தமானது 02.07.2024 அன்று, வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்திற்கும் JSW தூத்துக்குடி பல்நோக்கு முனையம் பிரைவேட் லிமிடெடிற்கும் இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, வடக்கு சரக்கு தளம் – 3, சுமார் ரூ.265.15 கோடி திட்ட மதிப்பில் இயந்திரமயமாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் துறைமுகத்தில், கூடுதலாக வருடத்திற்கு 7 மில்லியன் டன் சரக்குகளை கையாள முடியும். வடக்கு சரக்கு தளம் 3-ஐ 30 ஆண்டுகளுக்கு சலுகையாளர்கள் வெற்றிகரமாக செயல்படுவதற்கு தேவையான சாலை மற்றும் கிரேன் செயல்பாடுகள; கன்வேயர் மற்றும் சேமிப்புக் கிடங்கு அமைத்தல், சரக்கு கையாளுவதற்கு தேவையான இயந்திரங்களை அமைத்தல் போன்றவற்றை நிறுவுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டமானது, டிசம்பர் 2026 – க்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.துறைமுகத்தின் வடக்கு சரக்கு தளம் 3 – ல் பெரிய பனாமாக்ஸ கப்பல்களைக் கையாளுவதற்கு வசதியாக, தளத்தின் மிதவை ஆழத்தினை 14.20 மீட்டர் ஆழப்படுத்தும் பணிக்கான ஒப்பந்தம் கோரப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தளம் நிலக்கரி, சுண்ணாம்புக்கல், ஜிப்சம் மற்றும் ராக்பாஸ்பேட் போன்ற சரக்குகளை மொத்தமாக கையாளும் வசதியை பெறும், இதன் மூலம், அதிக முதலீட்டாளரை ஈர்ப்பது மட்டுமில்லாமல் கடல்சார் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு, நேரடி மற்றும் மறைமுக வாய்ப்பினை உருவாக்கும்.
ஓப்பந்த கையெழுத்திடலின் போது, துறைமுக ஆணையத்தின் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், கூறுகையில், 306 மீட்டர் தள நீளம் மற்றும் 14.20 மீட்டர் மிதவை ஆழமும் கொண்ட பொது சரக்கு முனையமானது, மொத்த சரக்குகளை கொண்ட 80,000 DWT கொள்ளளவு கொண்ட பெரிய கப்பல்களை கையாள முடியும் என்று கூறினார். இதனால் இறக்குமதியாளர் களுக்கு பொருளாதாரத்தின் பலனை அடைய முடியும் என்று தெரிவித்தார்.
துறைமுக நிர்வாக அலுவலத்தில் வைத்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், துறைமுக ஆணையத்தின் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், JSW தூத்துக்குடி பல்நோக்கு முனையம் பிரைவேட் லிமிடெட் சார்பாக இயக்குநர் மற்றும் தலைமை நிதி அதிகாரி லலித் சிங்க்வி ஆகியோர் இணைந்து கையெழுத்திட்டனர். இதில், துறைமுக ஆணைய துணைத்தலைவர் (பொறுப்பு) வி.சுரேஷ்பாபு, மற்றும் JSW நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்