மார்த்தாண்டம் , பிப்- 23
செப்டிக் டேங்க் கழிவுகள், மனித கழிவுகள், சாக்கடை ஆகியவற்றை சுத்திகரிப்பு செய்து அந்தத் தண்ணீரை மீண்டும் விவசாயத்திற்கு, குளிப்பதற்கும் மற்றும் பயன்பாட்டிற்காகவும் கொண்டு வருவதற்கான முயற்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் முதன் முதலாக கோயம்புத்தூரை அடுத்த மேட்டுப்பாளையம் நகராட்சியில் கழிவு நீரை சுத்திகரித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இது பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தமிழகத்தில் இரண்டாவதாக குமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் கீழ்பம்மம் பகுதியில் 50 -சென்ட் நிலப் பரப்பில் செப்டிக் டேங்க் கழிவுகள், மனித கழிவுகள் மற்றும் கழிவுநீர்களை சுத்திகரிக்கும் வகையில் நவீன இயந்திரங்கள் பொருத்தி ஐந்துக்கும் மேற்பட்ட சேப்டி டேங்களுடன், இரண்டு பில்டர்களுடன் ,பிரம்மாண்டமாக கழிவுகளை சுத்திகரிக்க கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 3- கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதற்கான பணியினை அப்போது குழித்துறை நகர் மன்ற தலைவர் பொன் ஆசை தம்பி தொடங்கி வைத்தார். இந்நிலையில் பணி நடைபெற்று வந்ததை அடுத்து அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டது. தற்போது அதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்து.
அதனை நகர் மன்ற தலைவர் பொன் .ஆசை தம்பி , நகர்மன்ற ஆணையாளர் ராஜேஸ்வரன், பொறியாளர் குறள் செல்வி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து நகர் மன்ற தலைவர் பொன் .ஆசை தம்பி கூறியதாவது : – இந்த தண்ணீரில் எந்த வாசனையோ, கலங்கலோ இல்லாமல் தெளிந்த தண்ணீராக இருக்கும், இதனால் யாருக்கும் எந்த தொற்றோ எந்த பாதிப்பும் இருக்காது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தை பார்க்க விரும்பும் பள்ளி கல்லூரி, மாணவ மாணவிகள் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டால் உரிய அனுமதி வழங்கப்பட்டு அது குறித்து அதிகாரிகள் விளக்கி கூறுவார்கள். கழிவு சுத்திகரிப்பு நிலையம் தமிழகத்திலே இரண்டாவதாக பயன்பாட்டிற்கு குழித்துறை நகராட்சிக்கு வந்துள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் குழித்துறை நகராட்சி மற்றும் சுற்றியுள்ள பேரூராட்சிகள், பஞ்சாயத்துகளில் உள்ள கழிவுகளை இங்கு கொடுத்து அதற்கான சிறிய தொகையை செலுத்தினால் அதனை சுத்திகரிக்கப்பட்ட உரமாகவும் தன் நீராகவும் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விரைவில் இதற்கான திறப்பு விழா நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பிஜு, ரத்தினமணி மற்றும் அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் உடன் இருந்தனர்.