திருப்பூர் ஜூலை 27
சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மற்றும் காந்திநகர் ரோட்டரி சங்கம் இணைந்து கார்கில் விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் உள்ள குமரன் அரங்கில் 25வது கார்கில் வெற்றி விழாவும், போரில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்புரை ஆற்றினார், காந்திநகர் ரோட்டரி சங்க தலைவர் உமாகாந்த் முன்னிலை வகித்தார், கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமையுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் ராஜராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். துணை ஆணையர் பேசுகையில், கார்கில் விஜய் திவாஸ் தேசிய ஒற்றுமை மற்றும் தேசபக்தியின் சக்திவாய்ந்த சின்னமாகும், கார்கில் போர் இந்தியாவின் அனைத்து மூலைகளிலிருந்தும் மக்களை ஒன்றிணைத்தது, குடிமக்கள் மத்தியில் தேசிய பெருமையை வளர்க்கும் கார்கில் விஜய் திவாஸ் அன்று தொடர்ந்து கொண்டாடப்படுகிறது, போரின் வீரம் மற்றும் வீரத்தின் கதைகள் எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்க வேண்டும், இந்நாள் தேசத்திற்கான கடமை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை அவர்களுக்குள் ஊட்டுகிறது என்றார். மேலும், உலக மாவீரர்களான இந்திய வீரர்களை நினைவு கூர்வதும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதும் அவசியம், 25வது கார்கில் விஜய் திவாஸ் என்பது 25 வருட மகிழ்ச்சியான வெற்றியைக் குறிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் மறக்க முடியாத நிகழ்வாகும் என்று பேசினார். பிறகு, ரோட்டரி சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், உதவி ஆளுநர் சிவபாலன், திட்ட அலுவலர் கிருபானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவ செயலர்கள் மது கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், நவீன்குமார் ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு இராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலியும், கூட்டு பிரார்த்தனையும் செய்தனர். இறுதியாக ரோட்டரி சங்க செயலாளர் மணிமாறன் நன்றியுரை கூறினார்.