நாகர்கோவில் பிப் 26
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் நடந்த வாகனச் சோதனைகளில் கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்ற ரேசன் அரிசி மற்றும் மண்ணைண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்த விபரம் வருமாறு.
நேற்று முன்தினம் இரவு தனி வட்டாட்சியர் அனிதா குமாரி தலைமையில் தனி வருவாய் ஆய்வாளருடன் இணைந்து விளவங்கோடு வட்டம் அருமனை குஞ்சாலுவிளை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த சுமோ வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தபோது இருக்கைகளை மாற்றி ரகசிய அறைகள் அமைத்து நூதன முறையில் 1500 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வாகனத்தை ஒட்டி வந்த ஓட்டுனர் வாகனதை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இது போல் நேற்று நள்ளிரவு தனி வட்டாட்சியர் பறக்கும் படை (பொ) அனிதாகுமாரி தலைமையில் . துணை வட்டாட்சியர் பறக்கும் படை (பொ) சுனில்குமார், தனி வருவாய் ஆய்வாளர் மற்றும் ஒட்டுனர் சுரேஷ் ஆகியோர் வில்லுக்குறி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வேகமாக வந்த கேரள பதிவு எண் கொண்ட சொகுசு கார் ஒன்றினை சந்தேகத்தின் பேரில் நிறுத்த முற்பட்ட போது நிறுத்தாமல் சென்றுள்ளது. அந்த வாகனத்தை பின்னால் தூரத்தி சென்று தக்கலை அரசு மருத்துவமனை அருகே வைத்து வழிமறித்த போது காரை நிறுத்தி விட்டு ஒட்டுனர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் வாகனத்தை சோதனை செய்த போது வாகனத்தின் பின்பக்கம் சுமார் 1000 கிலோ ரேசன் அரிசி கண்டெடுக்கப்பட்டது.
அது போல் நேற்று அதிகாலை மணவாளக்குறிச்சி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது அந்த வழியாக வேகமாக வந்த கேரள பதிவு எண் கொண்ட பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முற்பட்ட போது அந்த வாகனத்தை ஓட்டுனர் நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். பின்னர் வாகனத்தை சோதனை செய்த போது. 50 கேன்களில் சுமார் 2000 லிட்டர் மீனவர்களின் படகுகளுக்கு பயன்படுத்தப்படும் மானிய விலை வெள்ளை நிற மண்ணைண்ணெய் தார்பாய் போட்டு மறைத்து வைக்கப்படிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்படி மூன்று சம்பவங்களில் கண்டுபிடிக்க பட்ட ரேசன் அரிசி மற்றும் மண்ணெண்ணை ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை காப்பு காடு அரசு உணவு கிட்டங்கி மற்றும் மண்ணெண்ணெய் குடோனில் ஒப்படைக்கப்பட்டது. வாகனங்களை மேல் நடவடிக்கைக்காக விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடத்தியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கடத்தல் வாகனத்தை கண்டுபிடித்த தனி வட்டாட்சியர் அனிதா குமாரி, துணை வட்டாட்சியர் பறக்கும் படை சுனில் குமார் ஆகியோரை பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டினார்கள்