ஈரோடு அக் 24
ஈரோடு மாவட்டத்தில் வேளாண் பணிகளை குறித்த காலத்தே செய்து முடிக்க அதிக நேரமும் அதிக அளவில் வேலையாட்களும் தேவைப்படுகிறது. கால விரையத்தை தவிர்க்கவும் வேலையாட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், வேளாண்மை இயந்திரமயமாக்குதல் இன்றியமையாததாகிறது. அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை வாங்க இயலாத விவசாயிகளுக்கு மனம் நிறையும் வகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகிறது.
மேலும் வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே இ- வாடகை ஆன்லைன் செயலியில் முன் பதிவு செய்து கொள்ளலாம். ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக உழுவை இயந்திரம் 14 எண்கள், மண்தள்ளும் இயந்திரம் 3 எண்கள். சிறிய உழுவை இயந்திரம் 2 எண்கள். மண் அள்ளும் இயந்திரம் 2 எண்கள், நெல் அறுவடை இயந்திரம் 2 எண்கள், தேங்காய் பறிக்கும் இயந்திரம் 2 எண்கள் மற்றும் நிலநீர் ஆய்வு கருவி 1 எண் ஆக மொத்தம் 26 இயந்திரங்கள் குறைந்த வாடகைக்கு விடப்படுகிறது. மேலும் 08.01.2022 முதல் 18.10.2024 வரை இ-வாடகை செயலி மூலம் 4421 பதிவுகள் செய்யப்பட்டதில் 1,694 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். மேலும் இதன் மூலம் அரசுக்கு வருவாயாக ரூ.2,24,87,570 ஈட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில், ரோட்டாவேட்டர் இயந்திரம் மூலம் தென்னை மரங்களுக்கிடையில் வளர்ந்துள்ள களைகளை உழவுப்பணி மேற்கொள்ளும்போது அழிக்கப்பட்டு உரமாக்கப்பட்டு வருகிறது. இப்பணியினை தனியார் இயந்திரம் மூலம் மேற்கொள்ள மணிக்கு ரூ.1000 வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. தற்பொழுது, தமிழ்நாடு அரசின் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் டிராக்டருடன் இயங்கக்கூடிய ரோட்டோவேட்டர் குறைந்த வாடகையான 5.500 வசூலிக்கப்பட்டு, இ-வாடகை ஆன்லைன் செயலியில் முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில், ஈரோடு மாவட்டம் தென்முகம் வெள்ளோடு, பெருந்துறை வட்டத்தைச் சார்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் டிராக்டருடன் இயங்கக்கூடிய ரோட்டோவேட்டரை குறைந்த வாடகையில் பெற்று, ஏக்கர் விவசாய நிலத்தில் தென்னை பயிர் செய்து, “நிறைந்தது மனம் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.